
தோல்வி பயத்தின் காரணமாகவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு, விவசாயக் கடன் தள்ளுபடி போன்ற நடைமுறைச் சாத்தியமற்ற உறுதிமொழிகளை வழங்க ஆரம்பித்துள்ளதாகத் தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், ஜனாதிபதி வேட்பாளருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் மீதும், மக்கள் மீதும் உண்மையான அக்கறை கொண்டிருந்தால், தற்போது வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை முன்னதாகவே நிறைவேற்றியிருக்க முடியும் என எல்பிட்டியவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போது அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்திருந்தார்.
சில மாதங்களுக்கு முன்பு அரசு ஊழியர்கள் சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்த போது, பொருளாதார நிலையைக் காரணம் காட்டி அதற்கு ரணில் விக்ரமசிங்க மறுப்பு தெரிவித்ததைச் சுட்டிக்காட்டிய அனுரகுமார திஸாநாயக்க, தற்பொழுது எவ்வாறு சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
விவசாயக் கடனை தள்ளுபடி செய்வது சத்தியமானது என்ற போதும் அதற்கு முறையான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்றும், அவ்வாறு எதனையும் செய்யாமல் ரணில் விக்ரமசிங்க தோல்வி பயத்தின் காரணமாகக் குழப்பமான வாக்குறுதிகளை வழங்குவதாகவும் தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், ஜனாதிபதி வேட்பாளருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.