கருத்துக்கணிப்பில் ரணில் முன்னிலை

கருத்துக்கணிப்பில் ரணில் முன்னிலை

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 4,522,916 வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவார் எனப் பல்கலைக்கழக பேராசிரியர்களினால் மாணவர்களின் பங்களிப்புடன் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

ரணில் விக்ரமசிங்க அதிக மாவட்டங்களில் வெற்றி பெறுவார் எனவும் கருத்துக் கணிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரச மற்றும் தனியார் பல்கலைக்கழக மாணவர்களின் பங்களிப்புடன் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பின் முடிவுகள் பல்கலைக்கழக பேராசிரியர்கள் தலைமையில் கொழும்பில் நேற்று(17.09) வெளியிடப்பட்டது.

ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச 3,602,547 (17.48%) வாக்குகளைப் பெற்றுக் கொள்வார் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.  

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க 3,627,686 (27.67%) வாக்குகளைப் பெற்றுக் கொள்வார் என மதிப்பிடப்பட்டுள்ளது.

14 மாவட்டங்களில் ரணில் விக்கிரமசிங்க அதிக வாக்குகளைப் பெற்றுக் கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றுள் கொழும்பு, கம்பஹா, காலி மாத்தறை, பதுளை, கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி, பொலன்னறுவை, அனுராதபுரம், யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் திகாமடுல்ல ஆகிய தேர்தல் மாவட்டங்கள் உள்ளடங்கும்

சஜித் பிரேமதாச மாத்தளை, புத்தளம், கேகாலை மற்றும் வன்னி ஆகிய நான்கு தேர்தல் மாவட்டங்களிலும், அனுரகுமார திசாநாயக்க களுத்துறை, ஹம்பாந்தோட்டை, மொனராகலை மற்றும் குருநாகல் ஆகிய நான்கு தேர்தல் மாவட்டங்களிலும் முன்னிலை பெறுவர் எனக் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

22 தேர்தல் மாவட்டங்களில் உள்ள 160 தொகுதிகளையும் உள்ளடக்கிப் பெற்றுக்கொள்ளப்பட்ட 33,280 மாதிரியைப் பயன்படுத்தி இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.

மேலும், செப்டம்பர் 7ம் திகதி வரையிலான காலப்பகுதியில் 4.5% வாக்காளர்கள் இறுதி முடிவை மேற்கொள்ளவில்லை எனத் தெரியவந்துள்ளது.

கருத்துக் கணிப்பின் முடிவுகளை வெளியிடும் நிகழ்வில் தேசிய சட்டத்தரணிகள் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி நளின் பத்திரன, சட்டத்தரணி சுரங்க பெரேரா, பேராசிரியர் நந்த தர்மரத்ன உட்படப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Social Share

Leave a Reply