குருணாகல் பாடசாலைக்கு நவீன வசதிகளுடன் கூடிய நூலகம் 

குருணாகல் பாடசாலைக்கு நவீன வசதிகளுடன் கூடிய நூலகம் 

குருணாகல் டி.பி. வெலகெதர மத்திய கல்லூரியில்  நிர்மாணிக்கப்பட்ட நவீன மற்றும் முழுமையான நூலகத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் தலைமையில் நேற்று(18.09) நடைபெற்றது.

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் வழிகாட்டலின்படி ஜனாதிபதி அலுவலகத்தினால் இந்த சகல வசதிகளுடனும் நூலகம் வழங்கப்பட்டுள்ளதுடன், இலங்கைக்கான சீனத் தூதரகம் இதற்கு நிதியுதவி வழங்கியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டி.பி. வெலகெதர மத்திய  கல்லூரியில் 2000இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்பதோடு மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளுக்கும் மேலதிக கல்வியை பெறுவதற்கு உதவியாக பல புத்தகங்கள், டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக அறிவைப் பெறுவதற்கான உபகரணங்கள், இணைய வசதிகள் மற்றும் ஸ்மார்ட் தொலைக்காட்சி (DP Education Foundation அனுசரணையில்) மற்றும் பல மின்னணு சாதனங்களும் இந்த நூலகத்திற்கு வழங்கப்பட்டுள்ளன.

பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கல்வி கற்கும் மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்கு இந்த நூலகம் பெரும் வரப்பிரசாதமாக அமையும்.

மேலும், இத்திட்டத்தின் கீழ் நீர்கொழும்பு துவ கனிஷ்ட கல்லூரி மற்றும் நவகத்தகம கொங்கடவல கல்லூரி ஆகிய இரண்டு பாடசாலை நூலகங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழும் திறமையான மாணவர்களின் அறிவு மற்றும் திறன்களை விருத்தி செய்து நல்லொழுக்கமுள்ள எதிர்கால சந்ததியை நாட்டுக்கு வழங்குவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

நூலகத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் இலங்கைக்கான சீனத் தூதரக  பிரதித் தூதுவர் மற்றும் பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பிரதேசவாசிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க,

60 வருடங்களுக்கு முன்பாக இந்த பாடசாலையிலிருந்து விலகிச் சென்றேன். பாடசாலை காலத்தில் புத்தகங்களை வாசிப்பதில் அதிக ஆர்வம் இருந்தது. பின்னர் பல்கலைக்கழகத்திற்கு தெரிவானதை அப்போதைய அதிபர் பதிராஜவிடம் கூற வந்தேன். பட்டம் பெற்ற பின்னர் “sky is the limit” வானமே எல்லை என்ற சிந்தனையுடன் செயற்பட வேண்டுமென அறிவுரை சொன்னார். இன்று அதுவே உண்மையாகியுள்ளது.

நான் இந்த பாடசாலையில் 3 – 10 ஆம் ஆண்டு வரையில் கற்றேன்.  சிறிய அளவான கட்டிடங்களே இங்கு இருந்தாலும் அதற்குள் தான் நாட்டின் எதிர்காலம் வடிவமைக்கப்படுகிறது. இந்த பாடசாலை மாத்திரமன்றி இதனை அண்மித்து காணப்படும் பாடசாலை மாணவர்களுக்கும் குறைந்தபட்சம் ஒரு மணித்தியாலமாவது இந்த நூலகத்தை பாவனை செய்ய அனுமதியளிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.  

இந்த நூலகத்தை கட்டமைக்க உதவிய சீன தூதுவருக்கும் தூதரக அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவிப்பதோடு, நாட்டின் நல்ல பிரஜைகளாக உருவாவதற்காக இந்த நூலகத்தை பயன்படுத்தி கொள்ளுமாறு மாணவர்களிடம் கேட்டுகொள்கிறேன்.

சீன பிரதித் தூதுவர், வடமேல் மாகாண ஆளுநர் தீபிகா.கே.குணரத்ன ஆகியோரும் இந்நிகழ்வில் உரையாற்றியதோடு, பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்களும், ஓய்வுபெற்ற ஆசிரியர்களும், பெற்றோர்களும், பிரதேச மக்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Social Share

Leave a Reply