இலங்கை எதிர் நியூசிலாந்து: முதலாம் நாள் நிறைவு

இலங்கை எதிர் நியூசிலாந்து: முதலாம் நாள் நிறைவு

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று(26.09) ஆரம்பமாகியது. காலி சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இலங்கை அணி சிறந்த ஆரம்பத்தைப் பெறவில்லை என்ற போதும், போட்டியின் இன்றைய நாள் ஆட்ட நேர முடிவின் போது 3 விக்கெட் இழப்பிற்கு 306 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பத்தும் நிசங்க ஒரு ஓட்டத்துடன் முதலாவது ஒவரிலேயே ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து களத்திற்கு வந்த தினேஷ் சந்திமல், திமுத் கருணாரத்னவுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

திமுத் கருணாரத்ன 46 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, களத்திற்கு வந்த அஞ்சலோ மெத்தியூஸ் நிதானமாக துடுப்பெடுத்தாடினார். மறுபுறம் தினேஷ் சந்திமல் தனது 16வது டெஸ்ட் சதத்தைப் பூர்த்தி செய்தார். அவர் 116 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் களத்திற்கு வந்த கமிந்து மென்டிஸ், அஞ்சலோ மெத்தியூசுடன் இணைந்து ஆட்டம் நிறைவடையும் வரை களத்திலிருந்தனர். அஞ்சலோ மெத்தியூஸ் 78 ஓட்டங்களையும், கமிந்து மென்டிஸ் 51 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். தொடர்ந்து 8 டெஸ்ட் போட்டிகளில் 50க்கு கூடிய ஓட்டங்களைக் கடந்த முதல் வீரராக கமிந்து மென்டிஸ் பதிவானார்.

நியூசிலாந்து அணி சார்பில் பந்து வீச்சில் டிம் சவுதி, க்ளென் பிலிப்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுக்களை பெற்றுள்ளனர்.

இதன்படி, இலங்கை அணி இன்றைய நாள் ஆட்டநேர முடிவின் போது 3 விக்கெட் இழப்பிற்கு 306 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையிலுள்ளது.  

இலங்கை XI: தனஞ்சய டி சில்வா(அணித் தலைவர்), திமுத் கருணாரத்ன, பத்தும் நிசங்க, குசல் மென்டிஸ், அஞ்சலோ மெத்தியூஸ், தினேஷ் சந்திமல், கமிந்து மென்டிஸ், நிஷான் பீரிஸ், பிரபாத் ஜயசூரிய, மிலன் ரத்நாயக்க, அசித்த பெர்னாண்டோ

நியூசிலாந்து XI: டாம் லாதம், டெவோன் கான்வே, கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் ப்ளூன்டெல், க்ளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், டிம் சவுதி(அணித் தலைவர்), அஜாஸ் படேல், வில்லியம் ஓர்ர்கே

Social Share

Leave a Reply