டி20 உலகக் கிண்ணம்: முதல் வெற்றி பங்களாதேஷ்க்கு

டி20 உலகக் கிண்ணம்: முதல் வெற்றி பங்களாதேஷ்க்கு

2024ம் ஆண்டிற்கான மகளிர் டி20 உலகக் கிண்ணத் தொடரின் முதல் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றுள்ளது. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் இன்று(03.10) பிற்பகல் நடைபெற்ற இந்த போட்டியில் பங்களாதேஷ் மற்றும் ஸ்கொட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தியிருந்தன.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி பங்களாதேஷ் 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 119 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. பங்களாதேஷ் சார்பில் ஷோபனா மோஸ்டரி 36(38) ஓட்டங்களையும், ஷதி ராணி 29 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

ஸ்கொட்லாந்து சார்பில் பந்து வீச்சில் சாஸ்கியா ஹார்லி 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினார்.

120 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து மகளிர் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 103 ஓட்டங்களைப் பெற்றுத் தோல்வியடைந்தது. ஸ்கொட்லாந்து சார்பில் சாரா பிரைஸ் 49 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

பங்களாதேஷ் சார்பில் பந்துவீச்சில் ரிது மோனி 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இதன்படி, பங்களாதேஷ் அணி 16 ஓட்டங்களினால் வெற்றியீட்டியதுடன், பங்களாதேஷின் ரிது மோனி ஆட்ட நாயகியாகத் தெரிவு செய்யப்பட்டார்.

2014ம் ஆண்டிற்கு பிறகு மகளிர் டி20 உலகக் கிண்ணத் தொடரில் பங்களாதேஷ் அணி பெற்றுக்கொண்ட முதல் வெற்றியாக இது பதிவாகியது. 

Social Share

Leave a Reply