2024ம் ஆண்டிற்கான மகளிர் டி20 உலகக் கிண்ணத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டி டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று(04.10) நடைபெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி நியூசிலாந்து 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 160 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. நியூசிலாந்து சார்பில் அபாரமாக துடுப்பெடுத்தாடிய அணித் தலைவி சோபி டிவைன் ஆட்டமிழக்காமல் 57(36) ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். ஜார்ஜியா பிலிம்மர் 34(23) ஓட்டங்களையும், சுசி பேட்ஸ் 27(24) ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இந்தியா சார்பில் பந்து வீச்சில் ரேணுகா சிங் 2 விக்கெட்டுக்களையும், அருந்ததி ரெட்டி, ஆஷா ஷோபனா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
161 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி, 19 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 102 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுத் தோல்வியடைந்தது. இந்தியா சார்பில் எந்தவொரு வீரர்களும் 15க்கு கூடிய ஓட்டங்களைப் பெற்றுக் கொள்ளவில்லை.
நியூசிலாந்து சார்பில் பந்து வீச்சில் ரோஸ்மேரி மெய்ர் 4 விக்கெட்டுக்களையும், லியா 3 விக்கெட்டுக்களையும், ஈடன் கார்சன் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
இதன்படி, நியூசிலாந்து மகளிர் அணி 58 ஓட்டங்களினால் வெற்றியீட்டியதுடன், நியூசிலாந்தின் சோபி டிவைன் ஆட்ட நாயகியாகத் தெரிவு செய்யப்பட்டார்.
மகளிர் டி20 உலகக் கிண்ணத்திற்கு முன்னர் 10 டி20 போட்டிகளில் தொடர் தோல்விகளைச் சந்தித்த நியூசிலாந்து மகளிர் அணி, வலுவான இந்தியா அணியை வீழ்த்தியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.