
ஶ்ரீ லங்கா கிரிக்கெட்டினால் நடத்தப்படும் 2022ம் ஆண்டிற்கான தேசிய சூப்பர் லீக் தொடரைக் கொழும்பு அணி கைப்பற்றியது. யாழ்ப்பாணம் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் வெற்றியீட்டியதனூடாக கொழும்பு அணி கிண்ணத்தைச் சுவீகரித்தது. இறுதிப் போட்டி தம்புள்ளையில் நேற்று(06.10) நடைபெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொழும்பு அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி, கொழும்பு அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 413 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. கொழும்பு அணிக்குச் சரித அசலங்க 206(142) ஓட்டங்களையும், அவிஷ்க பெர்காண்டோ 126(113) ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
சரித அசலங்க பெற்றுக்கொண்ட இரட்டை சதம், A பிரிவுப் போட்டிகளில் இலங்கை வீரர் ஒருவர் பெற்றுக்கொண்ட இரண்டாவது அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாகப் பதிவானது.
யாழ்ப்பாணம் அணி சார்பில் பந்து வீச்சில் மதீஷ பத்திரன, லஹிரு மதுஷங்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
414 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் அணி 47.1 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 321 ஓட்டங்களைப் பெற்று தோல்வியடைந்தது. யாழ் அணி சார்பில் லஹிரு மதுஷங்க 104(86) ஓட்டங்களையும், ரோன் சந்திரகுப்த 56(53) ஓட்டங்களையும், மொஹமட் ஷமாஸ் 49(39) ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
கொழும்பு அணி சார்பில் பந்துவீச்சில் திலும் சுதீர 3 விக்கெட்டுக்களையும், நுவன் துஷார, தசுன் ஷானக, சரித அசலங்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
அதன்படி, கொழும்பு அணி 92 ஓட்டங்களினால் இந்த போட்டியில் வெற்றியீட்டியதுடன், 2024ம் ஆண்டிற்கான 50 ஓவர்கள் தேசிய சூப்பர் வீக் தொடரையும் கைப்பற்றியது. இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகனாகக் கொழும்பு அணித் தலைவர் சரித அசலங்க தெரிவு செய்யப்பட்டார்.