இலங்கையின் அரச கடன்களை முகாமைத்துவம் செய்வதற்குத் தேவையான கடன் முகாமைத்துவ மென்பொருள் கட்டமைப்பைக் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
2024 ஆண்டின் 33 இலக்க கடன் முகாமைத்துவ சட்டத்திற்கு அமைய அரச கடன் முகாமைத்துவ அலுவலகம் நிறுவப்பட வேண்டும். மேற்குறித்த சட்டத்தின் 23வது பிரிவின் ஏற்பாடுகளுக்கு அமைய அரச கடன்கள் தொடர்பான இற்றைப்படுத்தப்பட்ட விபரமான, சரியான தரவுகள் மற்றும் தகவல்கள் பொருத்தமான தரவு கட்டமைப்பில் பேணப்பட வேண்டும்.
அரசு ஏற்கனவே வெளிநாட்டுக் கடன்களை அறிக்கை செய்தல் மற்றும் கடன் முகாமைத்துவத்திற்காக பொதுநலவாய செயலகத்தினால் வழங்கப்பட்டுள்ள Commonwealth Secretariat Debt Recording and Management System (CS-DRMS) கட்டமைப்பைப் பாவிப்பதுடன், அது வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தில் நிறுவப்பட்டுப் பேணப்படுகிறது.
இருப்பினும், குறித்த கட்டமைப்பை இற்றைப்படுத்துதல் மற்றும் வருடாந்த உரிமத்தை நீடித்தல் செயற்பாடுகளை பொதுநலவாய செயலகம் தற்போது நிறுத்தியுள்ளது.
அரச கடன் முகாமைத்துவ அலுவலகத்தை நிறுவுதல் தொடர்பாகச் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் தொழில்நுட்ப தூதுக் குழுக்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளதுடன், பொதுநலவாய செயலகத்தினால் வழங்கப்படும் Commonwealth Meridian மென்பொருள் அல்லது ஐக்கிய நாடுகளின் வர்த்தக மற்றும் அபிவிருத்திக்கான அமைப்பினால் வழங்கப்படும் DMFAS மென்பொருளைப் பாவிப்பது பொருத்தமானது எனப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய, கிரயம் சாதகமானதாக இருத்தல், தரவு வெளிப்படுத்தல் இலகுவாக இருத்தல், அவற்றின் தொடர்ச்சியான பேணத்தக்கத் தன்மை மற்றும் கட்டமைப்புகளுக்கிடையில் ஒருமைப்பாட்டை உறுதி செய்வதற்கான இயலுமை இருத்தல் ஆகிய காரணிகளின் Commonwealth Meridian மென்பொருளைக் கொள்வனவு செய்வதற்கான முன்மொழிவைப் பெறுவதற்கும், குறித்த முன்மொழிவுக்கு அமைச்சரவையால் நியமிக்கப்படும் பெறுகை குழுவின் பரிந்துரை பெறுவதற்கும் நிதி, பொருளாதார அபிவிருத்தி, கொள்கை வகுப்பு, திட்டமிடல் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.