உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – அறிக்கைகளை திங்கட்கிழமை பகிரங்கப்படுத்துவதாக கம்மன்பில உறுதி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - அறிக்கைகளை திங்கட்கிழமை பகிரங்கப்படுத்துவதாக கம்மன்பில உறுதி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கைகளை அரசாங்கம் வெளியிடாவிட்டால் எதிர்வரும் திங்கட்கிழமை தாம் அவற்றைப் பகிரங்கப்படுத்தவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

விசேட ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து அவர் இன்று (16.10) இந்த அறிவிப்பை விடுத்தார்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான செனல் 4 அறிக்கை மற்றும் குறித்த தாக்குதல் தொடர்பில் புலனாய்வு அமைப்புகள் செயற்பட்ட விதம் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளின் பக்கங்கள் காணாமற் போனமை தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என அரசாங்கம் அண்மையில் தெரிவித்திருந்தது.

எனினும், அந்த அறிக்கைகளின் பக்கங்கள் காணாமற் போகவில்லை எனவும் அரசாங்கத்திடமுள்ள அந்த அறிக்கைகளை 7 நாட்களுக்குள் வெளியிடாவிட்டால் தாம் அவற்றைப் பகிரங்கப்படுத்துவதாகவும் உதய கம்மன்பில கூறியிருந்தார்.

அவ்வாறான அறிக்கைகள் காணப்படுமாயின் அதனை 03 நாட்களுக்குள் வெளியிடுமாறு அமைச்சர் விஜித ஹேரத் உதய கம்மன்பிலவிடம் நேற்று (15.10) சவால் விடுத்திருந்தார்.

இந்நிலையில் அவரது சவாலுக்கு உதய கம்மன்பில தற்போது பதிலளித்துள்ளார்.

குறித்த அறிக்கைகளை வெளியிடுவதாக உறுதியளித்துள்ளமையால் தாம் அதனை ஒருபோதும் அரசாங்கத்திடம் கையளிக்கப் போவதில்லை எனவும்
உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“ இந்த அறிக்கைகள் கடந்த 10 ஆம் திகதியே எனக்குக் கிடைக்கப்பெற்றன.
அந்த அறிக்கைகள் கிடைத்து 4 நாட்களுக்குள் அது குறித்து நான் அறிவித்தேன்

குறித்த விசாரணை அறிக்கையை வெளியிடாமல் வைத்திருப்பது பாரிய குற்றம் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்திருந்தார்.
எந்த அச்சுறுத்தல் வந்தாலும், மக்களுக்கு உண்மையை அறிவிப்பதிலிருந்து நான் பின்வாங்கப் போவதில்லை” என்றார்.

Social Share

Leave a Reply