IMF இன் வரிச்சூத்திரத்தை அரசாங்கம் மாற்றியமைக்க வேண்டும் – சஜித்

IMF இன் வரிச்சூத்திரத்தை அரசாங்கம் மாற்றியமைக்க வேண்டும் - சஜித்

சர்வதேச நாணய நிதியத்தின் கட்டமைப்பிற்குள் மக்களின் சுமையை குறைக்கும் புதிய உடன்படிக்கைக்கு தற்போதைய அரசாங்கம் செல்ல வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நேற்று (16.10) அவர் இதனைக் கூறினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“இவ்வாறான உடன்படிக்கையின் மூலம் மக்களின் தோள்களில் சுமத்தப்பட்டுள்ள வரிச்சுமைகள் தளர்த்தப்பட்டு அதன் மூலம் வலுவான பொருளாதார ஸ்திரத்தன்மை உருவாகும்.

அதனால், தற்போதைய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்து, வரிச்சுமையை குறைக்கும் புதிய ஒப்பந்தத்திற்கு செல்லும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறான வேலைத்திட்டங்களுக்கு தாம் ஆதரவளிக்கத் நாம் தயார்.

வரிச்சுமையை குறைக்கும் பயணத்தை மேற்கொள்வதே 42% ஆனோரின் விருப்பத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ள தற்போதைய ஜனாதிபதியின் பொறுப்பாகும்.

பொருளாதார பொறிமுறை பலவீனமடைந்து, பொருளாதார வளர்ச்சி சுருங்கி இருக்கும் எமது நாடு, 2028 முதல் மீண்டும் கடனை செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

முன்னாள் அரசாங்கம் தேசியக் கடன் மறுசீரமைப்பின் போது மக்கள் மீது அதிக சுமையை ஏற்றி, மக்களுக்கு அழுத்தங்களையும் அசௌகரியங்களையும் ஏற்படுத்தும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது.

இவ்வாறு மக்களுக்கு ஏற்படுத்திய அசௌகரியங்களுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியே முன்நின்றது. சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து மக்களுக்கு நிவாரணம் கிடைக்காத காரணத்தினால், முன்னாள் அரசாங்கம் ஏற்படுத்திய உடன்படிக்கையில் திருத்தங்களை ஏற்படுத்த ஐக்கிய மக்கள் சக்தி கலந்துரையாடியுள்ளது. மக்கள் சார் உடன்படிக்கையை எட்டுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருந்தது.

நாட்டு மக்களை வாழ வைக்கும் பொறுப்பு தமக்கு இருக்கிறது, இதற்குத் தேவையான அதிகாரத்தை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்” என்று சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply