காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய அலுவலக உத்தியோகத்தர்கள், அரச, அரச சார்பற்ற உத்தியோகத்தர்கள் மற்றும் சிவில் சமூக கட்டமைப்புக்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் மன்னார் மாவட்டச் செயலகத்தில் நேற்று (28.10) நடைபெற்றது.
காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய அலுவலகத்துக்கும், அது தொடர்பாக வேலை செய்கின்ற சிவில் சமுக அமைப்புகளுக்கும், அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புகளுக்கும் இடையேயான தொடர்பை வலுப்படுத்தி, அந்த வலுப்படுத்துதல் ஊடாகக் காணாமல் போனவர்களின் குடும்ப பிரதிநிதிகளுக்கு உதவி செய்யும் நோக்கிலேயே இக்கலந்துரையாடல் இடம்பெற்றதாகக் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்தின் ஆணையாளர் யோகராஜா தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்ட அரச அதிபர் கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், கொழும்பிலிருந்து வருகை தந்த காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய அலுவலகத்தின் ஆணையாளர் T. யோகராஜா உட்பட ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி, சட்டத்தரணி உள்ளிட்ட உயர்மட்டக் குழுவினர் மற்றும் மன்னார் பிராந்திய அலுவலக உத்தியோகத்தர்கள், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்.