நாடு மீண்டும் வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்படும் – சஜித்

நாடு மீண்டும் வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்படும் - சஜித்

ஐக்கிய மக்கள் சக்திக்கு பெரும்பான்மையை வழங்குவதே நாட்டிற்கு பொருத்தமான தெரிவாக இருக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

2024 பொதுத் தேர்தலை இலக்காக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு கொலன்னாவ கட்சி செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பொன்று சஜித் பிரேமதாச தலைமையில் கொலன்னாவ பிரதேசத்தில் இடம்பெற்றது.இங்கு கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“நிர்க்கதிகளுக்கு மத்தியில் தமது வாழ்க்கையை நடத்தி வரும் மக்களுக்கு தேர்தலில் வாக்குறுதியளித்தபடி மக்கள் எதிர்கொண்டு வரும் அழுத்தங்களை குறைப்பதாக தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் உறுதியளித்தது. என்றாலும் இந்த மாற்றங்களை செய்ய முடியாத ஜே.வி.பிக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை வழங்காதீர்கள்.

ஜனாதிபதி தேர்தல் மேடைகளில் அநுர குமார திஸாநாயக்க கூறியது போல் அதிகாரத்திற்கு வந்தும் நேரடி மற்றும் மறைமுக வரிகளை அவரால் குறைக்க முடியாதுபோயுள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்தாலோசித்து உடன்படிக்கையை மாற்றியமைப்பேன் என்று தெரிவித்தார். ஆனாலும் அவரால் மாற்றியமைக்க முடியவில்லை.

தற்போது அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு, தேங்காய்களுக்கு வரிசையும் காணப்படுகின்றன. 2028 ஆம் ஆண்டு முதல் கடனை அடைப்பதாக முன்னாள் ஜனாதிபதி நாட்டையே சிக்கலில் தள்ளியுள்ளார். இதற்கு இன்னும் நான்கு வருடங்கள் மாத்திரமே உள்ளது.

கடனை செலுத்த விரைவான பொருளாதார வளர்ச்சி அவசியமாகும். இந்தக் கடனை திருப்பிச் செலுத்த, பெரும்பான்மையான ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்துக்கு நியமிக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் 2028 ஆம் ஆண்டு நாடு மீண்டும் வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்படும்.

IMF உடன் பேச்சுவார்த்தை நடத்தி மக்களுக்கு ஏற்ற இணக்கப்பாட்டில் ஐக்கிய மக்கள் சக்தியால் கையெழுத்திடலாம். வரிசை யுகத்திற்கு பதிலாக அபிவிருத்தி யுகத்தை உருவாக்கும் நாட்டை ஐக்கிய மக்கள் சக்தியால் கட்டியெழுப்ப முடியும்” என சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply