நாட்டிலுள்ள பழமையான கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தற்போது தனிநபர் ஆதிக்கம் நிலவுவதால் கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் இரத்தினபுரி மாவட்ட முன்னாள் அமைப்பாளர் சுப்பையா ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் கொழும்பு மாவட்டத்தில் தமிழ் வேட்பாளர் ஒருவரேனும் களமிறக்கப்படாமை தொடர்பிலும் ஆனந்தகுமார் கவலை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஆனந்தகுமார் விடுத்துள்ள அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது:
“தோல்வி மற்றும் பின்னடைவுகளிலிருந்து நாம் நிச்சயம் பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு பாடம் கற்காவிடின் தான் அது படுதோல்வியாக அமையும். அந்தவகையில் கட்சியில் கடந்தகாலங்களில் ஏற்பட்ட பின்னடைவு பற்றி நாம் மீளாய்வு செய்துபார்த்தால், தனிநபர் ஆதிக்கம் என்பது பிரதானமானதாக இருக்கும்.
நெருக்கடியான காலகட்டத்தில் கட்சியுடன் பயணித்த நாம், இந்த அணுகுமுறையால்தான் கட்சியிலிருந்து வெளியேறினோம். அதே வழியில் கட்சி பயணித்தால் பொதுத்தேர்தலிலும் பின்னடைவு ஏற்படக்கூடும். அனைத்து இன மக்களையும் அரவணைத்துக்கொண்டு பயணிக்கக்கூடிய கட்சிதான் ஐக்கிய தேசியக் கட்சி, இனவாதமற்ற, மதவாதமற்ற கட்சி சார்பில் கொழும்பில் தமிழ் வேட்பாளர் எவரேனும் களமிறக்கப்படாமை கவலையளிக்கின்றது.
நான் இம்முறை தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் எமது மக்கள் பணி தொடர்கின்றது. எதிர்காலத்திலும் அது தொடரும்”எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.