‘பாகிஸ்தான் இலங்கையரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்’ – அநுர

பாகிஸ்தானில் வசித்துவரும் மற்றும் பணிப்புரியும் இலங்கையர்களின் பாதுகாப்பை பாகிஸ்தான் அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டுமென, தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று (06/12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அதுதொடர்பில் தொடர்ந்துரையாற்றுகையில், கொடூரமான முறையில் அடித்து, சித்திரவதை செய்யப்பட்டு தீயிட்டு கொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமாரவின் கொலையில் ஈடுபட்ட சகலருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்க பாகிஸ்தான் அரசாங்கம் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன், அங்கு வாழும் ஏனைய இலங்கையர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன் இலங்கை அரசாங்கமும் இதுபோன்ற மிலேச்சத்தனமான கொலைகள் இனி இடம்பெறாதிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் இலங்கையும் இதுபோன்ற மத தீவிரவாதத்திற்கு முகம் கொடுத்துள்ளது என்றும், இலங்கையில் கடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதலை போன்று இனியும் இதுபோன்ற மத தீவிரவாதத்தால் மக்கள் பாதிக்கப்படக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தினார்.

'பாகிஸ்தான் இலங்கையரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்' - அநுர

Social Share

Leave a Reply