ஜனாதிபதி தேர்தல் மேடைகளில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – சஜித்

ஜனாதிபதி தேர்தல் மேடைகளில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை - சஜித்

ஜனாதிபதியானவுடன் கட்டுப்பாடற்ற வரிச்சுமையை உடனடியாக நீக்குவேன் என அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்த போதிலும் அதனை நிறைவேற்றவில்லையென ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

மத்திய கொழும்பு பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்மு உரையாற்றும் போதே அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

அவர் இரண்டு முறை, IMF உடன் கலந்துரையாடினார், ஆனாலும் அந்த கலந்துரையாடல்கள் மூலம் நாட்டிற்கு சாதகமான முன்னேற்றம் எட்டப்படவில்லை. வரிகளை குறைக்கும் நிபந்தனையை சர்வதேச நாணயம் நிதியம் மறுத்துள்ளது.

எனவே பாராளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலத்தை ஐக்கிய மக்கள் சக்திக்கு வழங்குமாறு கோரிக்கை விடுக்கிறேன். ஐக்கிய மக்கள் சக்தி அமைக்கும் அரசாங்கத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் ரணில் விக்கிரமசிங்கவும் ஏனையவர்களும் மக்களின் தலையில் சுமத்தியுள்ள வரிச் சுமையிலிருந்து விடிவைப் பெற்றுத் தருவோம். சர்வதேச நாணய நிதியத்தின் புதிய உடன்படிக்கையை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுப்போம்.

எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி சர்வதேச நாணய நிதியத்துடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தி பல உடன்பாடுகளை எட்டியுள்ளது.
தற்போதல்ல எதிர்க்கட்சியில் இருக்கும் போதே இவ்வாறான உடன்பாடுகளை எட்டினோம்.

33% ஆல் மின்கட்டணத்தை குறைப்பேன், 6 மாதங்களுக்கு ஒரு தடவை அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பள அதிகரிப்பைப் பெற்றுத் தருவேன், நேரடி மற்றும் மறைமுக வரிகளை நீக்குவேன் என அநுர குமார திசாநாயக்க மேடைக்கு மேடை தெரிவித்தார். ஆனால் ஆட்சிக்கு வந்து அதிகாரம் இருந்தும் சொன்னதை செய்யவில்லை.

முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் IMFக்கு நாட்டை காட்டிக்கொடுத்தது. வெளிநாட்டு கடனை 2033 முதல் செலுத்த வேண்டும் என்று IMF கூறியிருந்தாலும், முன்னாள் ஜனாதிபதி அதனை 2028 ஆம் ஆண்டு வரை குறைத்து ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார்.

கடன் திருப்பிச் செலுத்தும் காலம் 9 ஆண்டுகளில் இருந்து 4 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. முழு நாடும் 220 இலட்சம் மக்களும் தற்போது அழுத்தங்களுக்கும் சிரமங்களுக்கும் ஆளாகியுள்ளனர் அதனால் ஐக்கிய மக்கள் சக்தி மாத்திரமே மக்களுக்கு ஒரே தீர்வு என” சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply