தேசிய மக்கள் சக்தி, டக்ளஸ் தேவானந்தா, ரிஷார்ட் பதியுதின், மற்றும் அவர்களது குழுவினருக்கு ஒருபோதும் அமைச்சுப் பதவியை வழங்கப் போவதில்லையென தேசிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் பிமல் ரத்னாயக்கா தெரிவித்துள்ளார்.
நானாட்டான் பிரதேசத்தில் தேசிய மக்கள் சக்தியின் அலுவலகத்தைத் திறந்து வைத்து நேற்று முன் தினம் (06.11) உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“டக்ளஸ் தேவானந்தா மற்றும் ரிஷார்ட் ஆகியோர் பொய்ப் பிரச்சாரம் செய்கின்றனர். அவர்கள் பாராளுமன்றத் தேர்தலில் தாங்கள் வெற்றி பெற்றதும் அமைச்சுப் பதவியை ஜனாதிபதி தங்களுக்கு வழங்குவார் என எதிர் பார்க்கின்றனர்
அவர்கள் எவ்வாறு அப்படி நினைக்கலாம்? அவர்கள் பதவிகளில் இருந்த காலங்களிலேயே எல்லா ஊழல்களும் நடந்தேறியது, அப்போது அவர்கள் என்ன செய்தார்கள்?
டக்ளஸ் தேவானந்தாவை நினைக்கையில் வெட்கமாக உள்ளது அவர் ஜனாதிபதியைச் சந்தித்து ஒரு புகைப்படத்தை எடுத்துக் கொண்டு அதை வைத்து பொய்பிரச்சாரம் செய்து ஏமாற்றுகிறார்.
பழைய ஆட்சியாளர்கள் நாட்டை அழிவுப் பாதையில் கொண்டு சென்றபோது டக்ளஸ் தேவானந்தாவும் அமைச்சுப் பதவியில் இருந்தார். அதைவிட கடந்த ஜனாதிபதி தேர்தலில் அவர் ரணிலையே ஆதரித்தார்.
தேசிய மக்கள் சக்தியை ஆதரிக்காதவர்கள் எவ்வாறு அமைச்சுப் பதவியை எதிர்பார்க்க முடியும்?
மறுபுறம் ரிஷாட் பதியூதின் ஜனாதிபதி அனுர குமார தனது நண்பர் எனவும் தன்னுடன் தொலைபேசியில் உரையாடுவதாகவும் பொய் கூறுகிறார். கடந்த ஜனாதிபதி தேர்தலில் அவர் சஜித் பிரேமதாசாவையே ஆதரித்தார் ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் போது அவரும் அமைச்சுப் பதவியில் இருந்தார்.
நாங்கள் இப்போது கேள்விப் படுகிறோம் சுமந்திரனின் ஆதரவாளர்களும், சிறீதரனின் ஆதரவாளர்களும், மற்றும் சிறிய சுயேச்சைக் குழுக்களும், இந்த நாட்டை அழிவுப் பாதையில் இட்டுச் சென்றவர்களும், யுத்தம் முடிந்த காலத்தில் இந்தப் பகுதிகளில் கப்பம் பெற்றவர்களும், ஏழைத் தமிழ், முஸ்லிம் மக்களின் காணிகளை அபகரித்தவர்களும் இப்போது சொல்கிறார்கள் நாங்கள் திசைகாட்டியை ஆதரிக்கிறோம் என்று..
அவர்கள் திசைகாட்டியை ஆதரிப்பதென்றால் திசைகாட்டிக்கல்லவா வாக்களித்திருக்க வேண்டும். இலங்கையை ராஜபக்ஸக்கள் அழித்ததைப் போல வட பகுதியை அவர்கள் அழித்தார்கள் எனவே அவர்கள் யாரும் அமைச்சுக்குள் வரமுடியாது.
வடக்கு கிழக்கு உட்பட நாட்டு மக்கள் அனைவரும் தேசிய மக்கள் சக்தியையே ஆதரிக்கிறார்கள். எங்களிடம் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் என்ற பேதமில்லை. ஏழைகளின் வாழ்வை உயர்த்த வேண்டும், எல்லோருக்கும் சகவாழ்ளிக்க வேண்டும் எனவே நவம்பர் 14 ஆம் திகதிக்கு பின்னர் மக்கள் அனைவரும் இணைந்து ஒரு புதிய அரசாங்கத்தை உருவாக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில், வன்னி மாவட்ட வேட்பாளர்கள் ரைசுதீன், கமிலஸ், ராதாகிருஷ்ணன் உட்பட கட்சியின் ஆதரவாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்