தேர்தல் அறிவிக்கப்பட்டு இன்று வரை 26 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதாகவும் இன்றைய தினம் மாத்திரம் 6 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாகவும் மன்னார் மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலர் கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் அவை சுமுகமான முறையில் தீர்க்கப்பட்டுள்ளதாக இன்று (14.11) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர்,
“இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 17 வது பாராளுமன்றத் தேர்தல் நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகின்றது.
அந்த வகையில், மன்னார் மாவட்டத்தில் 90 ஆயிரத்து 607 வாக்காளர்கள் வாக்களிப்பிற்குத் தகுதி பெற்றுள்ள நிலையில், 98 வாக்களிப்பு நிலையங்களிலும், இன்று காலை 7 மணிமுதல் மக்கள் வாக்களித்து வருகின்றனர்.
அந்த வகையில் காலை 10 மணி வரை 21 ஆயிரத்து 784 பேர் இதுவரை வாக்களித்துள்ளனர்.இது மொத்த வாகாளர்களில் 24 வீதமாகும்.
அத்துடன், வளிமண்டலவியல் திணைக்களத்திடமிருந்து கிடைக்கப் பெற்ற தகவலின்படி பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதால் மன்னார் மாவட்ட வாக்காளர்கள் நேரத்துடன் சென்று வாக்களித்து தங்கள் ஜனநாயகக் கடமையினை நிறைவேற்றுமாறும் மக்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்