கல்விப்பொதுத் தராதரப்பத்திர உயர்தரப் பரீட்சையை இன்று திங்கட்கிழமை இடம்பெறவுள்ள நிலையில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
2, 312 பரீட்சை நிலையங்களில் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ளது.
இம்முறை கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு 320, 183 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.
அவர்களில் பாடசாலை ரீதியிலான விண்ணப்பதாரர்கள் 253, 390 பேரும் 79, 793 தனியார் விண்ணப்பதாரர்களும் உள்ளடங்குகின்றனர்.
இதேவேளை, உயர்தரப் பரீட்சையின் போது, பரீட்சை மண்டப பொறுப்பதிகாரிகளுக்கு மாத்திரமே பரீட்சை நிலையங்களுக்குள் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்படும் என திணைக்களம் அறிவித்துள்ளது.
பொறுப்பதிகாரிகளுடன் தொடர்பு கொள்வதற்கான தேவை உள்ளதால் அவர்களுக்கு கையடக்கத் தொலைபேசி பாவனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் மேலதிக பரீட்சை மண்டப பொறுப்பதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளவர்களும் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்த முடியும்.
நிலவும் சீரற்ற வானிலை தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறும் விசேடமாக மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.