நாட்டின் பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

வங்காள விரிகுடாவை சுற்றியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நாட்டின் பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினத்திற்குள் தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி நாட்டின் வடமேற்கு திசையில் நகரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக எதிர்வரும் சில தினங்களுக்கு நாட்டின் பல பகுதிகளில் காற்றுடன் கூடிய பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மன்னாரிலிருந்து காங்கேசன்துறை, திருகோணமலை, அம்பாறை முதல் ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் மறு அறிவித்தல் வரை கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என மீனவர்கள் மற்றும் கடல்சார் ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்த கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இன்றைய தினம் நாட்டின் பல பகுதிகளில் 150 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாகவும் மணிக்கு 40 கிலோமீற்றரிலும் அதிகரித்த வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலை எதிர்வரும் சில நாட்களுக்கு தொடரலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மேலும், அனர்த்த அபாயம் ஏற்பட்டால் 117 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி அறியப்படுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

Social Share

Leave a Reply