
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் நிலவும் ஆழமான காற்றழுத்த தாழ்வுநிலையால் வானிலையில் ஏற்பட்ட தாக்கம்
இன்றிலிருந்து படிப்படியாக குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நிலவும் ஆழமான காற்றழுத்த தாழ்வுநிலையானது, தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நேற்று (28) இரவு 11.30 மணியளவில் திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 240 கிலோமீற்றர் தொலைவிலும் காங்கேசன்துறைக்கு கிழக்கே 290 கிலோமீற்றர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது வடமேற்கு திசையில் தமிழக கடற்கரையை நோக்கி நகர அதிக வாய்ப்புள்ளதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அதன்படி, நாட்டின் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் இன்று அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட மாகாணத்தில் சில இடங்களில் 100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, மாத்தளை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு, வடமத்திய, வடமேற்கு, கிழக்கு, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மணிக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.