தென்குஜராத் வர்த்தக மற்றும் தொழில்துறை பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம்

தென்குஜராத் வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளன (SGCCI) பிரதிநிதிகள் பத்து பேர் உள்ளிட்ட தூதுக்குழு ஒன்று 2024 நவம்பர் 24 முதல் 29 வரை இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தது என இந்திய உயர் ஸ்தானிகராலய ஊடக பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இத்தூதுக் குழுவின் விஜயம் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே ஆழமான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டுள்ளது. கொழும்பிற்கான விஜயத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய இடங்களுக்கும் இக்குழுவினர் பயணித்தனர் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடல் சார்ந்த துறைகளில் வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்தும் நோக்கில் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை (EDB) ஒழுங்கமைக்கும் “Voyage Sri Lanka” நிகழ்வில் இப்பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். EDB மற்றும் இலங்கை சுற்றுல்லா ஊக்குவிப்பு திணைக்களம் (SLTPB) ஆகியவற்றின் பிரதிநிதிகளுடனான சந்திப்புக்களுக்கு மேலதிகமாக இக்குழுவானது, இலங்கை வர்த்தக சம்மேளனம் மற்றும் இந்தோ லங்கா வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனம் (ILCCI) உட்பட இலங்கையின் முக்கிய தரப்பினருடன் சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளது. மேலும் கபிட்டல் மஹாராஜா குழுமம் போன்ற முக்கிய நிறுவனங்களுடனும் ஏனைய முக்கிய தரப்பினருடனும் சந்திப்புகளை இக்குழுவினர் நடாத்தியிருந்தனர்.

இத்தூதுக்குழுவின் நிகழ்ச்சிநிரலின் முக்கிய அம்சமாக குஜராத்தின் சூரத்தில், 2025 ஜனவரி 25 முதல் 27 வரை நடைபெறவிருக்கும் சர்வதேச கண்காட்சியான Global Village 2025 இன் விளம்பரப்படுத்தல் செயற்பாடுகள் அமைந்துள்ளன. இந்த நிகழ்வானது பல்வேறு பங்குதாரர்களுடன் இணைவதற்கு ஓர் ஈடிணையற்ற தளத்தை வழங்குவதுடன் ஒத்துழைப்பிற்கான புதிய வழிகளையும் ஆராய்கின்றது.

இந்தியாவில் பல்வேறு நிலைகளில் உள்ள வணிக ரீதியான அமைப்புகளை இலங்கையின் வர்த்தக சமூகத்துடன் இணைக்கும் தொடர் முயற்சிகளின் ஆரம்ப நகர்வினை இந்த விஜயம் குறிக்கிறது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார பங்குடைமையினை மேலும் வலுப்படுத்தும் அதேநேரம் முதலீடு, பரஸ்பர வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான கதவுகளைத் திறக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply