யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது பரவி வரும் ஒருவகையான காய்ச்சலைக் கண்டறிவதற்காக தொடர்புடையவர்களின்
குருதி மாதிரிகள் கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் கண்டி போதனா வைத்தியசாலைக்கும்
அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியகலாநிதி
ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள நிலைமைக்குப் பின்னர் பருத்தித்துறை,
கரவெட்டி, சாவகச்சேரி ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் ஒரு வகையான காய்ச்சல் பரவி வருகின்றது.
இந்த காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நான்கு இறப்புக்களும்,
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இரண்டு இறப்புக்களும் பதிவாகியுள்ளன.யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில்
இறந்த ஒருவர் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்தவராவார்.
இறந்தவர்களில் பெரும்பாலானோர் இளம் வயதினராகக் காணப்படுகின்றனர். எல்லா இறப்புக்களும் சுவாசத்தொகுதி பாதிப்பினாலேயே ஏற்பட்டுள்ளது.
இந்த காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதத்தில் பன்னிரெண்டு
நோயாளர்களும் இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் இருபத்தொரு நோயாளர்களும் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
ஒருநாள் காய்ச்சலாக இருந்தாலும் உடனடியாக அருகிலுள்ள அரச வைத்தியசாலை வைத்தியர்களை
நாடுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
காய்ச்சல் ஏற்பட்டு தாமதமாக அரச வைத்தியசாலைகளுக்கு வருகை தந்தமையினாலேயே பெரும்பாலான இறப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
தகுந்த மருத்துவ ஆலோசனையின்றி நேரடியாக மருந்தகங்களில் மருந்துகள் வாங்கிப் பாவிப்பதைத்
தவிர்த்துக்கொள்ளுமாறும் யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி
ஆ.கேதீஸ்வரன் அறிவுறுத்தியுள்ளார்.