தனது நிர்வாகத்தின் கீழ் திட்டமிடப்பட்ட சில அபிவிருத்திகளை முன்னெடுத்துச் செல்வதற்கான அரசாங்கத்தின் தீர்மானம் குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் கூட்டறிக்கை இந்திய-இலங்கை ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வரவேற்கத்தக்க வளர்ச்சியாகும் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அவர் அறிக்கையொன்றை வெளியிட்டு இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
“பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கை மற்றும் பிராந்திய ஆற்றல் மற்றும் கைத்தொழில் மையமாக திருகோணமலையை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை தொடந்தும் முன்னெடுக்கின்றமைக்கு ஜனாதிபதிக்கு பாராட்டு தெரிவிக்கிறேன்.
இந்த கூட்டறிக்கையில், பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் குறித்து இருநாடுகளும் தொடர்ந்து கலந்துரையாடுவதாக இந்திய மற்றும் இலங்கை அரசுகள் அறிவித்துள்ளன.
திருகோணமலை நீர்த்தேக்கப் பண்ணைகளின் அபிவிருத்தி தொடர்பில் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவதை ஒப்புக்கொண்டு, பிராந்திய ஆற்றல் மற்றும் கைத்தொழில் மையமாக திருகோணமலையின் அபிவிருத்திக்கு ஆதரவளிக்க இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.