
பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளில் 60 ஸ்மார்ட் வகுப்பறைகளை ஸ்தாபித்தல் குறித்து இந்தியா- இலங்கை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து இடப்பட்டது என இந்தியா உயர்ஸ்தானிகராலாயம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசாங்கத்தின் 508 மில்லியன் ரூபா நன்கொடை உதவியுடன், இலங்கையின் பெருந்தோட்டப் பகுதிகளில் ‘தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளில் 60 ஸ்மார்ட் வகுப்பறைகளை ஸ்தாபித்தல்’ குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம், இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கௌரவ சந்தோஷ் ஜா மற்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர் திரு. பி.கே.பிரபாத் சந்திரகீர்த்தி ஆகியோரால், 2025 ஜனவரி 16 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டு பரிமாறிக் கொள்ளப்பட்டது.
இந்தத் திட்டத்தின் கீழ், இலங்கை அரசாங்கத்தால் அடையாளம் காணப்பட்ட பாடசாலைகளில் குறிப்பாக நுவரெலியாவில் உள்ள 48 பாடசாலைகளிலும், கண்டி மற்றும் பதுளை மாவட்டங்களில் தலா 6 பாடசாலைகளிலும் மாணவர்களின் பயன்பாட்டுக்காக 60 ஸ்மார்ட் வகுப்பறைகளை ஸ்தாபிப்பதே நோக்கமாகும். இந்த முயற்சியானது பாடசாலைகளில் அறிவுப் பகிர்வை மேம்படுத்தும் அதேவேளை, மாணவர்களுக்கு கற்றல் மூலமான நன்மைகளையும் பெற்றுத்தரும். அத்துடன் இந்தப் பாடசாலைகளின் தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப ஒருங்கிணைப்பையும் மேம்படுத்தும்.
இலங்கையுடனான 5 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான அபிவிருத்தி ஒத்துழைப்புத் திட்டத்துடன், கிட்டத்தட்ட சகல முக்கிய துறைகளிலும் இந்தியாவால் முன்னெடுக்கப்படும் மக்களை இலக்காக்க் கொண்ட அபிவிருத்தி உதவி திட்டங்கள் நாட்டின் 25 மாவட்டங்களிலும் உள்ள இலங்கை மக்களின் அன்றாட வாழ்வில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
குறித்த ஸ்மார்ட் வகுப்பறைகளை நிறுவும் திட்டமானது, இந்தியாவால் இலங்கையின் கல்வித் துறையில் கடந்த காலங்களிலும் தற்போதும் மேற்கொள்ளப்பட்டுவருகின்ற அபிவிருத்தி திட்டங்களுடன் இணைந்துகொள்ளும் மற்றொரு முயற்சியாகும். நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் ஆங்கில மொழி நிலையங்களை அமைத்தல், ருஹுணு பல்கலைக்கழகத்தில் இரவீந்திரநாத் தாகூர் நினைவு கேட்போர் கூடம் உட்பட நாடு முழுவதும் உள்ள ஏராளமான நிறுவனங்களில் கேட்போர் கூடங்களை நிறுவுதல் மற்றும் புதுப்பித்தல், வடமத்திய மாகாணத்தில் பொலன்னறுவையில் பல்லின மும்மொழிப் பாடசாலையை ஸ்தாபித்தல், வட மாகாணத்தில் 100க்கும் மேற்பட்ட பாடசாலைகளில் முன்னெடுக்கப்பட்ட புனரமைப்பு பணிகள், நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு 110 பஸ்களை வழங்கியமை, தொழிற்கல்வி நிறுவனங்களுக்கு ஆதரவு, தென் மாகாணத்தில் 200 பாடசாலைகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் கணினி கூடங்களை நிறுவுதல், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் மட்டக்களப்பு கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உதவிகள் தேவைப்படும் மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கல், மற்றும் ஏனைய பல திட்டங்கள் இதில் உள்ளடங்குகின்றன.
அத்துடன் 9 பெருந்தோட்டப் பாடசாலைகளை மேம்படுத்தும் திட்டத்திற்கு இந்திய அரசின் நன்கொடை ஆதரவை இருமடங்காக அதிகரிப்பதற்காக இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்களால் அண்மையில் இராஜதந்திர ஆவணங்கள் பரிமாறப்பட்டன. இந்திய வம்சாவளி தமிழ் சமூகம் இலங்கைக்கு வருகைதந்து 200 ஆண்டுகள் நிறைவடைந்தமையைக் குறிக்கும் வகையில் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட 750 மில்லியன் ரூபா பல்துறை நன்கொடை உதவியின் கீழ், பெருந்தோட்டப் பாடசாலைகளில் STEM பாடங்களில் 3 மாத ஆசிரியர் பயிற்சித் திட்டமும் அண்மையில் நடத்தப்பட்டது. இலங்கையின் பெருந்தோட்டப் பாடசாலைகளில் பணியாற்றும் 2000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளதாகவும் இந்தியா உயர்ஸ்தானிகராலயம் கூறியுள்ளது.