
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோஷித்த ராஜபக்ஷ காணி மோசடி வழக்கில் 25 ஆம் திகதி கைது செய்யப்பட்டு இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் பாராளுமன்றத்தில் தான் அதிகமாக அரசாங்கத்து எதிராக குரல் கொடுப்பதாகவும், அதற்காக பழி தீர்க்க தன் சகோதரன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்த கைதுக்காக மக்கள் பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ள நாமல், தமக்கு அழைப்பு விடுத்திருந்தால் தாமே நேரடியாக முன்னிலையாகியிருப்போம் எனவும், பெலியத்தை வரை அதி வேக நெடுஞ்சாலையில் வருகை தந்து கைது செய்து மக்கள் பணம் வீணடிக்க தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார். அதேவேளை யார் குற்றம் செய்தாலும் அதற்கான நடவடிக்கையை அரசாங்கம் எடுக்கலாம். ஆனால் அதற்குரிய முறையை பேணவேண்டும் எனவும் மேலும் கருத்து கூறியுள்ளார். “நாம் செய்த குற்றம் செய்திருந்தால் நீதிமன்றத்துக்கு அழைத்து சென்று நிரூபியுங்கள். அதனை விடுத்து இவ்வாறு ஊடக பிரச்சாரங்களை செய்ய வேண்டாம்” என நாமல் மேலும் அரசாங்கத்துக்கு தகவல் கூறியுள்ளார்.
அரசியல் பழிவாங்கலுக்காக அரசியல் வாதிகளையும், அவர்களது குடும்பங்களையும் பழி வாங்க அரசாங்கம் நேரத்தை செலவிடுவதனை தவிர்த்து, மக்கள் பிரச்சினைகளை தீர்க்கவும், மக்கள் 3 வேளைகளும் உணவு உண்ணக் கூடிய நிலையை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.