வலுவான பொருளாதாரத்திற்கான முதல் அடியெடுத்து வைக்கப்பட்டுள்ளது – ஜனாதிபதி

வலுவான பொருளாதாரத்திற்கான முதல் அடியெடுத்து வைக்கப்பட்டுள்ளது - ஜனாதிபதி

கடந்த அரசாங்கங்களின் தவறான நிதி முகாமைத்துவத்தின் காரணமாக வங்குரோத்தடைந்த நமது நாடு, தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தின் கீழ் ஒரு குறிப்பிட்ட தகுதிகாண் காலத்தில் இருப்பதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இந்த சூழ்நிலையில் ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப வலுவான பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான அடிப்படை நடவடிக்கை இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக எடுத்துள்ளதாகக் கூறினார்.

கொழும்பு சினமன் லைப் ஹோட்டலில் இன்று (19.02) நடைபெற்ற 2025 வரவு செலவுத் திட்டத்திற்குப் பின்னரான கருத்தாடல்(“POST BUDGET FORUM 2025”) இல் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,

கடன் மறுசீரமைப்பு மூலம் கிடைத்த மூன்று வருட சலுகைக் காலத்தை சிறந்த முறையில் பயன்படுத்தி, 2028 ஆம் ஆண்டுக்குள் சரியான பொருளாதார முகாமைத்துவத்தின் மூலம் கடன் திருப்பிச் செலுத்தும் திறனை அடைய அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

வங்குரோத்தடைந்த ஒரு நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப பல உலகநாடுகளுக்கு ஒரு தசாப்தம் வரை சென்றாலும், இலங்கை அதிலிருந்து மீள்வதற்கு ஒரு தசாப்தத்திற்கும் குறைவான காலமே செல்லும் என்று கணிப்பிட முடியும்.

இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் அரச வருவாயை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15.1% ஆக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
முன்னுரிமை அடிப்படையில் நிதியை செலவிடுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.

பொருளாதாரத்தை விஸ்தரித்து பொருளாதாரத்தை கிராமங்களுக்குக் கொண்டு செல்வதன் மூலமும், குடிமக்களைப் பொருளாதாரத்தின் ஒரு பகுதியாக மாற்றுவதற்கும் இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதனால் குடிமக்கள் பயனடையும் திறனை அதிகரிக்க முடியும்.

பொருளாதாரத்தில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட குழுக்களை மீண்டும் பொருளாதாரத்திற்குள் கொண்டு வருவதன் மூலம் கிராம மட்டத்தில் சிறிய பொருளாதார அலகுகளை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது, அதன்படி, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவோரை உருவாக்குவதற்கான ஆர்வத்தை நாட்டில் உருவாக்க எதிர்பார்க்கிறோம்.

கைத்தொழில்துறைக்கு உதவுவதே அரசாங்கத்தின் நோக்கம் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, உற்பத்திச் செலவுகளைக் குறைப்பதன் மூலம் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்குவதே அரசாங்கத்தின் குறிக்கோள் என்றும் தெரிவித்தார்.

கிராமப்புற வறுமையிலிருந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக கல்விக்காக இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் அதிக அளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் பாடசாலைக் கட்டமைப்பில் மனித மற்றும் பௌதீக வளங்களை மறுசீரமைக்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். இது ஒற்றைத் திசை கல்விக்குப் பதிலாக பல் திசைக் கல்வியை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அரச செலவின முகாமைத்துவம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அரச சேவைக்காக அதிக செலவு மேற்கொள்ள வேண்டியுள்ளது. எனவே, அரச நிறுவனங்களின் செலவினங்களை மறுபரிசீலனை செய்யவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியல் அதிகாரத்தை ஊழல் இல்லாத இடமாக மாற்றியுள்ளோம், இலஞ்சம் கொடுக்காத கலாச்சாரத்தை உருவாக்குவது குடிமக்களின் பொறுப்பாகும்.

ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தை உருவாக்க புதிய வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட எதிர்பார்த்துள்ளோம்.
இந்த ஆண்டு அதிக ஏற்றுமதி வருவாயை எதிர்பார்க்கிறோம்.

துறைமுக மையப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இந்த ஆண்டு திறமையான கொள்கலன் பரிமாற்ற மையத்தை உருவாக்குவதில் வரவு செலவுத் திட்டதின் ஊடாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சுற்றுலாத் துறையை ஊக்குவிப்பதற்காக நகர வர்த்தக நாமத் திட்டங்கள் (City Brand) செயல்படுத்தப்பட்டு வருவதோடு அனுராதபுரம், யாபஹுவ மற்றும் யாழ்ப்பாணம் போன்ற நகரங்களை முன்னேற்றுவதற்கான திட்டங்களும் வகுக்கப்படுகின்றன.

நாட்டின் பொருளாதார வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கு இராஜதந்திர சேவையைப் பயன்படுத்த எதிர்பார்க்கிறோம்.

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, வர்த்தக முகாமைத்துவம் தொடர்பான முதுமானி ஆய்வாளர் சங்கத்தின் தலைவர் சுராஜ் ரதம்பொல உட்பட ஆய்வாளர்கள் மற்றும் வர்த்தகத் துறைசார்ந்தோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version