தற்போதைய அரசாங்கம் ஏற்றுமதி சேவை துறையின் மீது 15% வரி விதித்துள்ளதால் ஏற்றுமதி ஊக்குவிப்பு நடவடிக்கையின் மீது இது தீங்கை விளைவிப்பதாக எதிர்கட்சித்
தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (18.03) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
இந்த வரி விதிப்பு தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதி துறையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அரசாங்கம் 15% வரி விதிப்பதாக கூறும்போது, இதற்குப் பொறுப்பான அமைச்சர் இதற்கு எதிரான கருத்தை வெளியிட்டார். அரசாங்கத்திடம் கூட இது தொடர்பில் சரியான கொள்கையொன்று இல்லை.
15% வரி விதிக்கப்பட்டதை மற்றுமொரு தரப்பினர் வெற்றியாக கருதின்றனர். IMF 3-0% வரி விதிப்பை பிறப்பிக்குமாறு கூறினாலும், அரசாங்கம் 15% வரியை பிறப்பித்துள்ளது. நமது நாட்டின் ஏற்றுமதி துறையில் வரிக் கொள்கையை தீர்மானிக்கும் விடயத்தை சர்வதேச நிதி நிறுவனத்துக்கு வழங்க முடியாது. IT ஏற்றுமதி துறையின் மூலம் வருமானம் ஈட்டும் தொழில்முனைவோர் பாரபட்சங்களுக்கு ஆளாகின்றனர். ஆகவே இத்துறையினர் இந்த 15% வரிவிதிப்புக்கு எதிர்ப்பை தெரிவிக்கின்றனர்.
அமெரிக்காவால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வர்த்தக வரிக் கொள்கையால் எமது நாட்டின் ஏற்றுமதிகளுக்கு, வர்த்தகக் கொள்கைக்கு கடும் பாதகமான நிலை ஏற்பட்டுள்ளன. உலக அளவில் வர்த்தக வரி உயர்த்தப்பட்டிருக்கும் பிரச்சினைக்கு அரசாங்கம் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும்.
வெளிநாட்டலுவல்கள் மற்றும் கைத்தொழில் அமைச்சு உள்ளடங்கலாக நாட்டின் பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்தும் அனைத்து அமைச்சுக்களும் ஒன்றுபட்டு ஜனாதிபதி ட்ரம்பின் கொள்கைக்கு முகம்கொடுக்க சிறந்ததொரு திட்டத்தை கொண்டிருக்க வேண்டும். உற்பத்திப் பொருளாதாரம், உற்பத்திக் கைத்தொழில் ஊடாக எமது நாட்டிற்கு செல்வத்தை ஈட்டித்தரும் ஏற்றுமதியை மையமாகக் கொண்ட கைத்தொழில்களை மேம்படுத்துதல் என்கின்ற இலக்கினை நோக்கி இதற்கூடாகப் பயணிக்க முடியுமா என்பது குறித்து ஆராய வேண்டும்” என்றார்.
மேலும் வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினையை அரசாங்கத்தின் பிரதமர் உடல் உறுப்புக்களுக்கு வரையறுத்து கீழ்த்தரமான விடயமாக மாற்றிவிட்டுள்ளார். தேர்தலின் போது வேலையற்ற பட்டதாரிகளுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அமைச்சர் ஹதுன்நெத்தி அவர்கள் இன்று மீறியுள்ளதாகவும் இதற்கு உடனடித் தீர்வுகள் தேவை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.