2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் உத்தியோகபூர்வ வறுமைக் கோட்டின் பிரகாரம், ஒரு நபர் ஒரு மாதம் வாழ்வதற்கு 16334 ரூபா தேவை என தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நால்வர் கொண்ட குடும்பத்திற்கு மாதம் 65336 ரூபா தேவைப்படுகிறது. இதன் மூலம் வாழ முடியுமா என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார்.
உணவு மற்றும் உணவு அல்லாத செலவுகள் காணப்படுகின்றன. பொருட்களின் தற்போதைய விலையில் இந்த இலக்கை அடைய முடியுமா என்பதில் பிரச்சினை காணப்படுகின்றன. இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பாக்கெட் 50 ரூபாவால் அதிகரித்துள்ள நிலையில், 4 பேர் கொண்ட குடும்பத்தின் உணவுக்குத் தேவைகளுக்கு 65336 ரூபா போதுமா ? இதனை அரசாங்கம் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர்
கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
வறுமைக் கோட்டை மதிப்பிடும் முறைமையில் பல பிழைகள் காணப்படுகின்றன. இது குறித்து ஆராய்ந்து, தரவு மையக் கொள்கைகளை வகுக்க வேண்டும். தவறான தரவுகளின் அடிப்படையில் அரசாங்கக் கொள்கைகள் வகுக்கப்பட்டால், அனைத்தும் சீர்குலையும். முன்னைய அரசாங்கமும் இது போன்ற விஞ்ஞான பூர்வ தரவுகளின் அடிப்படையில் அஸ்வெசும திட்டத்தை முன்னெடுக்காமையினால் தோல்வி கண்டதொரு திட்டமாக அது இன்று மாறியுள்ளது.
நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையினர் தொடர்பில் மீண்டும் சிந்தித்து நடவடிக்கை எடுங்கள்.
சர்வதேச வர்த்தக உறவுகளை நாம் பேணிக்கொள்ள வேண்டும். தற்போது நமது நாட்டில் இருதரப்பு மற்றும் பலதரப்பு வர்த்தக ஒப்பந்தங்கள் காணப்படுகின்றன. இந்த ஒப்பந்தங்கள் தொடர்பான அரசாங்கத்தின் கொள்கை நிலைப்பாட்டை அறிய விரும்புகிறோம்.
ஜி எஸ் பி பிளஸ் சலுகை குறித்து மீண்டும் கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றன. நாட்டை நேசிக்கும் எதிர்க்கட்சி என்ற வகையில், ஜி எஸ் பி பிளஸுக்காக எப்போதும் குரல் எழுப்பி வருகிறது. இதனைப் பெற நாம் எமது பூரண ஆதரவை பெற்றுத் தருவோம்.
நுகர்வோர் மற்றும் வணிகத் துறை குறித்து நாம் புதிதாக சிந்திக்க வேண்டும். உணவு பாதுகாப்பு குறித்த கொள்கைகளை உருவாக்கும் போது, நாம் சரியான வழியில் அதனை செய்ய வேண்டும். இல்லையெனில், தவறான தரவுகளின் அடிப்படையில் அரச கொள்கைகள் வகுக்கப்படும்.
வாடிக்கையாளரைப் பாதுகாப்பதில், உயர்தரத்துடன் வாடிக்கையாளரைப் பாதுகாக்கும் புதிய செயல்முறைக்குச் சென்று, சட்டத்தை வலுவாக்கி, நுகர்வோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஒரு பயனுள்ள முறைபாடுகளைத் தீர்க்கும் பொறிமுறையை தாபித்து, உற்ப்பத்தி தொடர்பான பாதுகாப்பை வழங்கி, சிறந்த விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்தல் நடைமுறைகளை உருவாக்கி, தரவு தொடர்பான பாதுகாப்பை ஏற்படுத்தி, அதனை கண்காணித்து வரும் பொறிமுறையை தாபித்து, இதனை வினைதிறனாக நடைமுறைப்படுத்த வேண்டும். இதன் மூலம் நுகர்வோர் பாதுகாக்கப்படுவார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.