சர்வதேச நாணய நிதியத்தின் கைப்பாவையாக அரசாங்கம் மாறியுள்ளது – சஜித்

கடந்த தேர்தல் காலத்தின் போது பேரின மற்றும் நுண் பொருளாதாரத்தை எவ்வாறு கையாள்வது என்பது குறித்தும், அது தொடர்பாக பல தொடர் வாக்குறுதிகளையும் சமூக ஒப்பந்தத்தின் மூலம் வளமான நாடு, அழகிய வாழ்க்கை என்ற கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்த போதிலும், அந்த சமூக ஒப்பந்த கொள்கைத் திட்டம் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர்
சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத்திட்ட பொருளாதார அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் இன்று (20.03) கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

கொள்கைப் பிரகடனத்தின் மூலம் பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டாலும் இன்றளவில் அவை மீறப்பட்டுள்ளன.

தற்போதைய அரசாங்கம் தேர்தல் காலத்தில் புதிய கடனை உறுதிப்படுத்தும் உடன்படிக்கைக்கு செல்வதாக கூறிய போதிலும், அது கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டாலும், கடைசியில் அவ்வாறான புதிய உடன்படிக்கைக்கு செல்லாமல், கடந்த அரசாங்கம் உருவாக்கிய நாட்டையும் நாட்டு மக்களையும் மிகவும் அடக்குமுறைக்கு உள்ளாக்கும், சாதாரண மக்களின் தோள் மீது சுமையைச் சுமத்தி மக்களை பழிவாங்கும் ஐஎம்எப் உடன்படிக்கைக்கும், இரு தரப்பு கடன் உடன்படிக்கைக்கும், சர்வதேச பிணைமுறி தாரர்களுடன் உடன்படிக்கைக்கும் சென்றதாகவும், ஐஎம்எப் கூறுகின்ற வசனங்களுக்கு நடனமாடுகின்ற, ஐஎம்எப் இன் கைப்பாவையாக இந்த அரசாங்கம் உருவாகியிருக்கிறது.

பொருளாதார வளர்ச்சி 5% இலக்கை நோக்கிச் செல்ல வேண்டும். 2028 ஆம் ஆண்டளவில் நாடு கடனைத் திருப்பிச் செலுத்தும் நிலைக்கு வரும் போது இந்த பொருளாதார வளர்ச்சி வேகத்தை நிறைவு செய்ய வேண்டும். இதனை 5% அல்ல அதனையும் விட அதிகரிக்க வேண்டும் என பிரார்த்தனை செய்கின்ற போதிலும், இந்த பொருளாதார வளர்ச்சி வேகத்திற்கூடாக நாட்டின் மொத்தத் தேசிய உற்பத்தியை மேம்படுத்துகின்ற அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் போதுமானதாக இல்லையென்றும் எதிர்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

Social Share

Leave a Reply