இன்று சமூகத்தின் சகல பிரிவைச் சேர்ந்த அனைவரும் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகி வரும் இவ்வேளையில், அந்த அசௌகரியத்தைப் பயன்படுத்தி, அந்த அசௌகரியத்தில் தவிக்கும் பிரிவினரைத் தூண்டிவிட்டு, அரசியல் வெற்றிகளைப் பெறுவதற்கும், அந்த அசௌகரியத்தைப் பயன்படுத்தி அத்தரப்பினரை மேலும் அடிமைகளாக்கவும் சிலர் முயற்சிக்கின்றனர்.
தெளிவான வேலைத்திட்டத்தோடு, சமூக ஜனநாயக கொள்கையிலமைந்த நடுத்தரப் பாதையைப் பின்பற்றி நாட்டையும் மக்களையும் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி செல்லும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பில் போட்டியிடும் வேட்பாளர்களுடன் நேற்று (22.03) நடந்த சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
சமூக ஜனநாயகம் மற்றும் மனிதாபிமான முதலாளித்துவ கொள்கையோடு ஐக்கிய மக்கள் சக்தி பயணிக்கிறது. தீவிர வலதுசாரி மற்றும் தீவிர இடதுசாரி கோட்பாடுகளை நாம் நிராகரிக்கிறோம். எமது பாதை நடுத்தரப் பாதையாகும். எமது நாட்டுக்கு இந்த கொள்கையே சரியானது .
இந்த ஏற்றத்தாழ்வை பயன்படுத்தி, வெறுப்பை விதைத்து, பாதிக்கப்பட்ட மக்களை பலியாக்கும் வெறுப்பு அரசியலை சமூகத்தில் சில குழுக்கள் முன்னெடுத்து வருகின்றன. இந்த வெறுப்பு அரசியலுக்கு சமூகத்தில் பல கற்பிதங்கள் இருக்கின்றன.
மக்கள் விடுதலை முன்னணியின் கொலைக் கலாசாரமும், தனியார், அரச சொத்துக்களுக்கு தீ வைத்து எரிக்கப்பட்ட விதமும், தொழிற்சாலைகள், வங்கிகள், கட்டிடங்கள் சாம்பலாக்கப்பட்ட விதமும், பிணத்தை எடுத்துச் செல்ல முடியாதது அவலமும் என இந்த பட்டியல் நீல்கின்றன. இன்று சமூகம் இந்த சமூகவிரோத தீவிரவாத செயற்பாடுகள் பற்றி பேசுகிறது.
மறுபுறம் இந்த அழிவுகரமான கொலைக் கலாசாரத்தினால் எமது நாடு இழந்த முதலீடுகள் மற்றும் சொத்துக்கள் தொடர்பில் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
கடந்த சில நாட்களாக அரசாங்கம் குரங்கு கணக்கெடுப்பு நாடகத்தை நடத்தி மக்களை ஏமாற்றி விட்டு, நேற்றைய தினம் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வரவு செலவுத்திட்டத்தின் இறுதி உரையை ஆற்றும் போது ஐக்கிய மக்கள் சக்தியை இழுத்துப் பேசியிருந்தார்.
பக்கம் மாறும் கலாசாரம் எம்மவர் மத்தியில் இல்லை என்று ஜனாதிபதி தெரிவித்தார். விமல் வீரவன்சவிலிருந்து, மக்கள் விடுதலை முன்னணியினர், அமைச்சரவை பதவிகளை வகித்தவர்கள் கூட அரசியல் முடிவுகளை எடுத்தனர். எனவே, இந்த பக்கம் தாவும் கலாசாரம் குறித்து பேசுவதற்கு ஜே.வி.பியினருக்கோ அல்லது ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கோ எந்த உரிமையுமில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.