பெண்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தல் மற்றும் முயற்சியாண்மையை மேம்படுத்துதல்’ எனும் தொனிப்பொருளில் ஜப்பான் அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் மன்னார் மாவட்டத்தில் பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான உதவி திட்டம் வழங்கும் நிகழ்வு, மன்னார் நகர மண்டபத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (21.03) இடம்பெற்றது.
கிறிஸாலிஸ்(Chrysalis) நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், பிரதம விருந்தினராக ஜப்பான் தூதரகத்தின் துணைத் தலைவர் பிரதி அமைச்சர் கமோஷிடா கலந்து கொண்டதுடன், விருந்தினர்களாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் உட்பட பிரதேச செயலாளர்கள்,பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் சுய தொழில் முயற்சியாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது சுய தொழிற் பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்ட தோடு, சுயதொழில் முயற்சி, மற்றும் வியாபார முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையில், ஜப்பான் அரசாங்கத்தின் நிதி உதவியுடன், தெரிவு செய்யப்பட்ட பெண்களுக்கான தையல் இயந்திரம்,சோளப்பொரி இயந்திரம், குளிர்சாதன பெட்டி போன்ற பல்வேறு தொழில் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இதன்போது மன்னார் மாவட்டத்தில் உள்ள, பெண் சுயதொழில் உற்பத்தியாளர்களினால் தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் ஆடைகள், அழகுசாதனப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டதுடன், விற்பனைச் சந்தையும் இடம் பெற்றது.
ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்