முன்னாள் பாதுகாப்பு படைகளின் பிரதானி சவேந்திர சில்வா மற்றும் LTTE அமைப்பின் முன்னாள் தளபதிகளில் ஒருவரான கருணா அம்மான் என்றழைக்கப்படுகின்ற விநாயகமூர்த்தி முரளிதரன். உள்ளிட்ட நால்வருக்கு ஐக்கிய இராச்சியம் தடை விதித்துள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு இவர்கள் பொறுப்புக்கூற வேண்டியுள்ளவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பாதுகாப்பு படைகளின் பிரதானியும் முன்னாள் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒவ் த ஃப்லீட் வசந்த கரன்னாகொட, முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய ஆகியோரும் ஐக்கிய இராச்சியத்தினால் தடைகள் விதிக்கப்பட்டவர்களில் அடங்குகின்றனர்.
அதற்கமைய இவர்கள் நால்வரும் ஐக்கிய இராச்சியத்திற்கான பயணங்களை மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் ஐக்கிய இராச்சியத்திற்குள் சொத்துக்களை சேகரித்து வைப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போது இடம்பெற்ற சட்டவிரோத கொலைகள், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இந்த தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய இராச்சிய அரசின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.