மேம்படுத்தப்பட்ட மீன் குஞ்சு பொரிப்பகத்தை கையளித்த ஐ.நா வின் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனம்

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனமானது, ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியுடன், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு மற்றும் இலங்கையின் தேசிய நீர் உயிரினவளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபை ஆகியவற்றுடன் இணைந்து, மேம்படுத்தப்பட்ட மீன் குஞ்சு பொரிப்பகம் மற்றும் மூன்று உயிர் விரலி மீன் குஞ்சு விநியோக பவுசர்களை அம்பாறை இங்கினியாகலவிலுள்ள மீன்வளர்ப்பு அபிவிருத்தி நிலையத்தில் இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளது.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் எச்.ஈ. அகியோ இசோமடா ஆகியோரின் பங்குற்றுதலுடன், உள்நாட்டு மீன்பிடி உற்பத்தியை மேம்படுத்துவதற்கும், கிராமப்புற மீனவ சமூகங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் இரு அரசாங்கங்களின் அர்ப்பணிப்பை வெளிக்காட்டும் வகையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

புதிதாக மேம்படுத்தப்பட்ட மீன் குஞ்சு பொரிப்பகம் மற்றும் உயிர் விரலி மீன் குஞ்சு விநியோக பவுசர்கள், மீன்களின் இனப்பெருக்கம், வளர்ப்பு மற்றும் உள்நாட்டு நீர்நிலைகளுக்கு தரமான மீன் குஞ்சுகளின் விநியோகத்தை மேம்படுத்தும். இது உள்நாட்டு மீன்பிடி உற்பத்தியை அதிகரிப்பதோடு, நிலையான ஊட்டச்சத்து கிடைப்பதையும் உறுதிசெய்யும்.

அத்துடன், உள்ளூர் மீனவ சமூகங்களின் வருமானத்தை அதிகரிக்கும். இந்த முயற்சியானது ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனத்தால் செயற்படுத்தப்பட்டு ஜப்பான் அரசால் நன்கொடையாக வழங்கப்படும் 03 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான திட்டத்தில் ஒரு முக்கிய மைல்கல் ஆகும்.

இது, இலங்கையில் உள்நாட்டு மீன்பிடியை வலுப்படுத்தவும், நிலையான மீன் வளர்ப்பை மேம்படுத்தவும் மேற்கொள்ளப்படுகிறது. இத்திட்டமானது இங்கினியாகல நீரியல் வளர்ப்பு அபிவிருத்தி நிலையத்தை மேம்படுத்துவதுடன் மேலும் மூன்று நீரியல் வளர்ப்பு அபிவிருத்தி நிலையங்களை மேம்படுத்துகின்றது.

கிராமப்புற மீனவ சமூகத்தால் இயக்கப்படும் சிறிய மீன் குஞ்சு பொரிப்பகத்தையும் பலப்படுத்துகின்றது. அத்தோடு, மட்டக்களப்பு, அநுராதபுரம் மற்றும் மொனராகலை ஆகிய இடங்களில் கிராமப்புற மீனவ சமூகத்தால் இயக்கப்படும் மூன்று புதிய சிறிய மீன் குஞ்சு பொரிப்பகங்களையும் நிறுவி வருகின்றது.

இலங்கையின் மீன்பிடித் துறையை முன்னேற்றுவதில் மூலோபாய பங்காளித்துவத்தின் முக்கியத்துவத்தை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் இதன்போது தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“ஒத்துழைப்பின் சக்திக்கு இந்தத் திட்டம் ஒரு சான்றாகும். மீன் குஞ்சு பொரிப்பக செயற்பாடுகளை வலுப்படுத்துவதன் மூலமும், உயிர் மீன் குஞ்சு விநியோகத்தை மேம்படுத்துவதன் மூலமும், அதிக உற்பத்தி மற்றும் நிலையான உள்நாட்டு மீன்பிடித் துறையை நாம் உறுதிப்படுத்துகின்றோம்.

இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான மீனவ குடும்பங்கள் பயன்பெறும்” என்றார்

Social Share

Leave a Reply