சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு மற்றும் மேல் மாகாண சபையினால் மூன்று நாட்கள் செயற்படுத்தப்படவுள்ள விசேட டெங்கு ஒழிப்புத் திட்டம் நேற்று (27.07) நுகேகொடை சுகாதார அதிகாரி அலுவலகத்தில் ஆரம்பமானது.
மாகாணம் முழுவதும் டெங்கு நுளம்பு இனப்பெருக்கம் செய்யும் இடங்களை கண்காணிக்கும் அதிகாரிகளுக்கு துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டதுடன், மேல் மாகாணத்தில் டெங்கு நுளம்பு இனப்பெருக்கம் செய்யும் இடங்களை அடையாளம் காண ட்ரோன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
கூட்டத்தில் உரையாற்றிய ஆளுநர், இந்த திட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் முப்படை அதிகாரிகள் உட்பட சுகாதார அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு விசேட நன்றி தெரிவித்தார்.
மேல் மாகாணத்தில் மூன்று நாள் டெங்கு ஒழிப்புத் திட்டம் செயற்படுத்தப்படுவது குறித்து மகிழ்ச்சியடைவதாகவும், இந்த ஆண்டு டெங்கு கணிசமாகக் குறைந்துள்ளதாகவும், Clean SriLanka திட்டத்தை செயற்படுத்துவதன் மூலம் இந்த நிலைமை இன்னும் திருப்திகரமாக இருக்கும் எனவும் அவர் கூறினார்.
டெங்கு ஒழிப்புக்கு ஆளுநராக அனைத்து ஆதரவையும் வழங்குவதாகவும் அவர் மேலும் கூறினார்.
இந்த நிகழ்வில் மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப், சுகாதார அமைச்சின் செயலாளர் அனில் ஜயசிங்க, மேல் மாகாண சுகாதார செயலாளர் எல்.ஏ. களுகபுஆராச்சி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.