கிளிநொச்சி, ஆனையிறவு உப்பு உற்பத்தி நிறுவனம் மீள ஆரம்பம்

தேசிய உப்பு நிறுவனத்தின் ஆனையிறவு உப்பு உற்பத்தி தொழிற்சாலையில், மேசை உப்பு உற்பத்தியை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை (29.03.2025) இடம்பெற்றது.

கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகரன் ஆகியோரின் பங்கேற்புடன் இந்த நிகழ்வு ஆனையிறவில் நடைபெற்றது.

உப்புத்தொழிற்சாலையினை விருந்தினர்கள் இணைந்து சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்த பின்னர் மேடை நிகழ்வுகள் இடம்பெற்றன.

தேசிய உப்பு நிறுவனத்தின் தலைவர் கயான் வெல்லால தனது வரவேற்புரையில், மன்னாரில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டாலும் அதனை விட ஆனையிறவு உப்பே தரமானது எனக் கூறினார்.

தற்போது பொருத்தப்பட்டுள்ள நவீன இயந்திரங்கள் மூலம் மணித்தியாலத்துக்கு 05 மெட்ரிக்தொன் மேசை உப்பை உற்பத்தி செய்யமுடியும் எனவும் தெரிவித்தார்.

2026 ஆம் ஆண்டிலிருந்து உப்பை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

வடக்கு மாகாணத்தில் இளையோருக்கு வேலை வாய்ப்பை வழங்கிய பல தொழிற்சாலைகள் போரினால் மூடப்பட்டுள்ளன. இதனால் வேலை வாய்ப்பின்மையானது எமது மாகாணத்தில் பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது என சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர் தெரிவித்தார்.

அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் ஆனையிறவு உப்பு தொழிற்சாலையை மீள முழு வீச்சில் இயக்க ஆரம்பித்திருக்கின்றது. ஆனையிறவு உப்புக்கு தனித்துவமான மதிப்பு இருக்கின்றது.
அந்த வகையில் இதை மீளச் செயற்படுத்துவதானது சிறப்பானது. எதிர்காலத்தில் ஆனையிறவு உப்பை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் ஊடாக எமது மாகாணம் மேலும் வளர்ச்சிப்பாதையில் பயணிக்கும், எனவும் தெரிவித்தார்.

கடற்றொழில் அமைச்சர் தனது உரையில், இன்றைய நாள் உங்களுக்கும், எங்களுக்கும் ஒட்டுமொத்த இலங்கையர்களுக்கும் மகிழ்ச்சியான நாள். பல இன்னல்களைச் சந்தித்தாலும் எமது மண்ணின் வாசத்தை பரப்பியது ஆனையிறவு உப்புத்தான். பலரும் விரும்பிப் பயன்படுத்து ஆனையிறவு மேசை உப்பு மீண்டும் உங்கள் கைகளுக்கு வரப்போகின்றது. ஆனையிறவு உப்புக்கு தனியான ‘மவுசு’ உண்டு. விரைவில் ஆனையிறவு உப்பு என்ற பெயரில் உலகம் எங்கு இது விற்பனையாகும் என்றார்.

இன்றைய நாள் எல்லோருக்கும் மகிழ்ச்சிக்குரிய நாள். எமது அரசாங்கம் பதவிக்கு வந்த 5 மாதங்களில் இந்த தொழிற்சாலையை திறந்து வைத்திருக்கின்றோம் என அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.

கடந்த காலங்களில் இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பை வேறு தரப்புக்கள் கொள்வனவு செய்து வெவ்வேறு பெயர்களில் விற்பனை செய்தார்கள். இப்போது இங்கிருந்தே மக்களுக்கு உப்பை விற்பனை செய்யும் வகையில் நாம் மாற்றியமைத்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply