உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் – FBI அறிக்கை

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகள் குறித்து விசாரணைகளை நடத்திய அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பிரிவு (FBI), தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிம் என தெளிவாகக் தெரிவித்துள்ளது.

தற்கொலை குண்டுதாரியாக தாக்குதலை நடாத்தி 268 பேரை கொலை செய்தும் 500 இற்கும் அதிகமானோரை காயமடைசெய்த சம்பவத்துக்கு மூல காரணமாக இருந்தவர் சஹ்ரான் ஹாஷிம் அல்லது சஹ்ரான் மொஹமட் ஹாஷிம் அல்லது மொஹமட் ஹாஷிம் மொஹமட் சஹ்ரான் எனவும், இவர் ISIS அமைப்பின் தலைவராக தன்னை தானே அறிவித்துக்கொண்டவர் எனவும், சிரியாவில் ISIS அமைப்பை தொடர்பு கொண்டு இலங்கையில் இயங்குவதற்கான ஒப்பந்தத்தை பெற்றுக்கொண்டதாகவும் FBI முகவர் மெர்ரிலி ஆர்.குட்வின் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலிஸ் அமெரிக்க மாவட்ட நீதிமதின்றதில் தெரிவித்துள்ளார். 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் திகதி பதிவு அமெரிக்காவில் செய்யப்பட்ட வழக்கின் விசாரணைகளின் அடிப்படையில் FBI இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த தாக்குதலில் 5 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டிருந்தனர்.

கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் அதிகம் வரும் சொகுசு ஹோட்டல்களை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலை குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து இலங்கை அதிகாரிகளுக்கு உதவிய FBI யின் இரண்டு ஆண்டு விசாரணையின் மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் மூன்று இலங்கையர்கள் மீது பயங்கரவாத குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன. இதில் தடை செய்யப்பட்ட வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புக்கு (ISIS) ஆதரவு வழங்கி சதி செய்தல் அடங்கும். இந்த ஆண்கள் “இலங்கையில் ISIS” என்று தங்களை அழைத்துக் கொண்ட ISIS ஆதரவாளர்கள் குழுவின் ஒரு பகுதியாக இருந்தனர் என விசாரணை செய்த முகவர் தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ்.ஐ.எஸ் உட்பட திட்டமிட்ட வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகள் மீதான விசாரணைகளை நடத்துவதில் தனக்கு பரந்த அனுபவம் இருப்பதாகவு நீதிமன்றத்தில் தெரிவித்த குறித்த முகவர்,
“இந்த விசாரணைகள் குறித்த எனது பணிகளிலிருந்து, பயங்கரவாதிகள் பயன்படுத்தும் நிறுவன மற்றும் செயற்பாட்டு உத்திகள், அவர்கள் பயன்படுத்தும் அரபு சொற்கள் உட்பட, இஸ்லாமிய சித்தாந்தம் ஆகியவற்றைக் கற்றுக்கொண்டேன். பயங்கரவாதத் தாக்குதல்கள் மற்றும் அமெரிக்க குடிமக்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க நான் பல முறை வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளேன். அந்தப் பணியில், குற்றச் சம்பவங்கள் நடந்த இடங்களுக்கு சென்று ஆராய்ச்சி செய்துள்ளேன். ஆதாரங்களைச் சேகரித்துள்ளேன், நேர்காணல்களை நடத்தியுள்ளேன்,” என்று அவர் நீதிமன்றத்தில் வழங்கிய பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார் FBI முகவர் மெர்ரிலி ஆர்.குட்வின்.

Social Share

Leave a Reply