ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோக்கர் டர்க் (Volker Türk) ஆணையாளர் யாழ்ப்பாணத்துக்கு சென்றுள்ளார். கொழும்பிலிருந்து ஹெலிஹாப்டர் மூலமாக அவர் யாழ் சென்றடைந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள காணாமலாக்கப்பட்டோரின் அலுவலத்துக்கு வாகனத்தின் மூலம் சென்றுள்ளார்.
இதன் போது காணாமலாக்கப்பட்டோரின் அலுவலகத்துக்கு அவர் செல்லும் வீதிகளில் மக்கள் பதாதைகளை தாங்கிய வண்ணம் வீதியின் இரு மருங்களிலும் அணி வகுத்து நின்றனர். கடந்த சில தினங்களாக நடைபெற்று வரும் “அணையா விளக்கு” போராட்டத்தின் இறுதி நாளான இன்று(25.06) போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.
செம்மணி மனித புதைகுழி உட்பட ஏனைய சம்பவங்களுக்கு சர்வதேச நீதி கோரி அணையா விளக்கு போராட்டம் நடாத்தப்படுகிறது. உயர்ஸ்தானிகரது கவனத்தை ஈர்க்கும் விதமாகவே இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
