இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நடைபெற்ற 3 போட்டிகளடங்கிய ஒரு நாள் தொடரை இலங்கை அணி 2-1 என கைப்பற்றியுள்ளது. நேற்று(08.07) கண்டி பல்லேகல சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் இலங்கை அணி 99 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்ளை இழந்து 285 ஓட்டங்களைப்பெற்றது. குஷல் மென்டிஸ் 124 ஓட்டங்களையும், சரித் அசலங்க 58 ஓட்டங்களையும் பெற்றனர். இவர்கள் இருவரும் இணைப்பாட்டமாக 124 ஓட்டங்களை பகிர்ந்தனர். பத்தும் நிஸ்ஸங்க 35 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நிஷான் மதுஷ்க இந்த தொடர் முழுவதுமாக பிரகாசிக்க தவறினார். இலங்கை அணி வெற்றியினை கொண்டிருந்தாலும் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்கள் மேலும் பிரகாசிக்க வேண்டும். அதுதான் இலங்கை அணிக்கு பலமாக அமையும். பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் மெஹதி ஹசன் மிராஸ், டஸ்கின் அஹமட் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய பங்களாதேஷ் அணி 39.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 186 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் தௌஹித் ரிதோய் 51 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இலங்கை அணி சார்பாக அசித்த பெர்னாண்டோ, டுஸ்மாந்த சமீர ஆகியோர் தலா 3 விக்கெட்ளை கைப்பற்றினார்கள். டுனித் வெல்லாளகே, வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது 20-20 போட்டி நாளை நடைபெறவுள்ளது.