கிண்ணியா படகு விபத்து – இருவருக்கு விளக்கமறியல்

கிண்ணியா குறிஞ்சாக்கேணி மிதகு படகு கவிழ்ந்த சந்தர்ப்பத்தில் கிண்ணியா பிரதேசத்தில் உள்ள அரச அலுவலக பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் மேலும் இரண்டு சந்தேகநபர்களை எதிர்வரும் 22ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்ற நீதவான் பயாஸ் ரசாக் முன்னிலையில் நேற்று (13) குறித்த சந்தேக நபர்கள் இரண்டு பேரையும் ஆஜர்படுத்திய போதே இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 23ஆம் திகதி இடம்பெற்ற கிண்ணியா குறிஞ்சாக்கேணி இழுவைப் படகு விபத்தின் போது மாணவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்த நிலையில் வீதியில் ஆர்ப்பாட்டம் செய்த நேரத்தில் பிரதேச செயலகம் மற்றும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கின் வீட்டுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் இரண்டு சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கிண்ணியா வைத்தியசாலை வீதியில் வசித்துவரும் 23 வயதுடைய இளைஞர் ஒருவரும், மஹ்ரூப் நகர் பகுதியில் வசித்து வந்த 40 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த பிரதேசத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டு கையடக்க தொலைபேசி பறிமுதல் செய்யப்பட்டமை தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

(திருகோணமலை நிருபர்)

கிண்ணியா படகு விபத்து - இருவருக்கு விளக்கமறியல்

Social Share

Leave a Reply