வடக்கு மாகாண சுகாதார துறையிடம் இருக்கும் குறைந்தபட்ச சுகாதார வளங்களையும் மத்திய அரசு ஆளனி பற்றாக்குறையை காரணம்காட்டி வேறு இடங்களுக்கு மாற்றம் செய்ய எடுக்கும் முயற்சிக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாதென இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் கடந்த (29.08) அன்று முல்லைத்தீவு மாவட்ட செயலக கேட்போர் கூட்டத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு மேற்படி பிரச்சினை தொடர்பில் கருத்து வெளியிடும்போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
நெதர்லாந்து நாட்டின் 2400 கோடி ரூபா நிதி அனுசரணையுடன் வடக்கு மாகாணத்தில் 4 முக்கியமான சுகாதார பிரிவுகள் நான்கு மாவட்டங்களில் என்னால் கொண்டுவரப்பட்டிருந்தன. முல்லைத்தீவு மாவட்டத்தில் புனர்வாழ்வு வைத்தியசாலை மாங்குளத்திலும், சிறுநீரக மற்றும் இருதய சிகிச்சை பிரிவுகள் வவுனியாவிலும், பெண் நோயியல் மற்றும் குழந்தை சிகிச்சைப்பிரிவு கிளிநொச்சியிலும், சத்திர சிகிச்சை, கதிரியக்க பிரிவு மற்றும் அவசர சிகிச்சை பிரிவு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையிலும் தற்போது செயல்ப்பட்டு வருகிறது.
ஆனால் அப்புதிய பிரிவுகளின் முழுமையான பயனைப்பெற மேலதிக பயிற்றப்பட்ட ஆளணி அவசியமாக உள்ளது.
தற்போது குறித்த பிரிவுகளை இயங்கச்செய்ய போதுமான ஆளணி இல்லை என்பதை காரணம்காட்டி குறித்த பிரிவுகளில் காணப்படும் மிகவும் பெறுமதியான சுகாதார உபகரணங்கள் உள்ளிட்ட வளங்களை வடக்கு மாகாணத்திற்கு வெளியே உள்ள வைத்தியசாலைகளுக்கு கொண்டுசெல்லும் முயற்சியினை மத்திய அரசாங்கம் செய்வதாக அறியமுடிகின்றது.
வைத்தியசாலைகளுக்கு ஆளனியை நியமிக்கும் பொறுப்பும் அதிகாரமும் மத்திய சுகாதார அமைச்சிற்கு உரியதாகும். ஆளனி வெற்றிட மீளாய்வு மாகாணசபை இயங்கிய காலத்தில் செய்யப்பட்டதன் பின்னர் இன்றுவரை செய்யப்படவில்லை. நீண்டகாலமாக வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளமை மத்திய சுகாதார அமைச்சின் தவறாகும். அதற்காக, ஆளனி பற்றாக்குறையை காரணம் காட்டி வடக்கு மாகாணத்திற்கென வழங்கப்பட்ட சுகாதார வளங்களின் பயன்பாட்டுத் தேவை இருக்கும்போது வடக்கிற்கு வெளியே அவற்றை கொண்டு செல்லும் முயற்சிக்கு இடமளிக்கமுடியாது.
மாறாக, மத்திய சுகாதார அமைச்சர் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் அதிகாரிகளுடன் நேரில் சந்தித்து பேசி ஆளனி பற்றாக்குறையினை உடனடியாக நிவர்த்தி செய்யும் நடவடிக்கையினை மேற்கொள்ளலாம்.
இன்றய கூட்டத்திற்கு தலைமை தாங்கும் பிரதி அமைச்சர் அதற்கான ஒழுங்கமைப்பினை செய்து தரவேண்டும். உங்கள் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாமும் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், பணிப்பாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் ஆகியோரும் இணைந்து மத்திய சுகாதார அமைச்சரை சந்தித்து இப்பிரச்சினைக்கான தீர்வினை விரைவில் காணலாம். அதுவே இப்பிரச்சினையை தீர்ப்பதற்கான சிறந்த வழியாகும் என தெரிவித்தார்.