யாழ். பல்கலைக்கழக விவசாய பீட சமுதாய மேம்பாட்டுக்குழுவின் ஏற்பாட்டில், தானியங்கி நுண்நீர்பாசனத்தில் வெற்றிகரமான செய்கை பண்ணப்பட்ட கத்தரிச்செய்கை அறுவடை விழா நேற்று (09.09) சிறப்புற நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்டத்தின் அறிவியல்நகரில் அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் சேவையை சமூகத்திற்கு வழங்கும் ஓர் அங்கமாக குறித்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கிளிநொச்சி திருவையாறுப்பகுதியில் கோவிப்பிரியன் விவசாயி வயலில் இன்றைய தினம் காலை 9:00மணிக்கு குறித்த நிகழ்வு நடைபெற்றது.
விவசாய பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர்.க.பகீரதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.
மேலும் சிறப்பு விருந்தினர்களாக யப்பான் நாட்டு பேராசிரியர்.ரோறு ரமிர்ஸ்னாகா, இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளன தலைவர் மு.சிவமோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் விவசாய பீட விரிவுரையாளர்கள், விவசாய பீட பண்ணை முகாமையாளர், கிராமசேவையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர், விவசாயிகள், பாடசாலை மாணவர்கள் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்ததாக கிளிநொச்சி மாவட்ட ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.