அக்குரெகொட துப்பாக்கிசூடு – திடுக்கிடும் வாக்குமூலம்!

அக்குரெகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி பல முக்கிய தகவல்களை பொலிஸாரிடம் வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

டி-56 ரக துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என சந்தேகிக்கப்படும் குறித்த நபர் அம்பலாங்கொடை, தெல்துவ பகுதியில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.

46 வயதான முன்னாள் இராணுவ வீரரான இவர், ஆரம்ப விசாரணைகளில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. கொலைக்குப் பின்னர் கொட்டாவ பகுதியில் இருந்து பேருந்து மூலம் அம்பலாங்கொடைக்கு சென்றதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டிருந்த இவர், “கரந்தெனிய சுத்தா” என அழைக்கப்படும் நபரின் ஒப்பந்தத்தின் பேரில் இந்தக் கொலையை செய்ததாகவும், அதற்காக பணமும் ஹெரோயினும் பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் 12 விசாரணைக் குழுக்களை அமைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சந்தேகநபர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரிக்கப்படுகிறார்.

Social Share

Leave a Reply