பெண்களை ஒரு புதிய கோணத்தில் பார்ப்பதற்க்கு முயற்சி செய்தல் அவசியம்!

உலகெங்கிலும் உள்ள பெண்களைக் கொண்டாடும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு எனது வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.

“அனைத்து பெண்கள் மற்றும் சிறுமிகளுக்காக: உரிமைகள். நீதி. செயல்” எனும் தொனிப்பொருளின் கீழ் இவ்வாண்டு சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகின்ற இவ்வேளையில், நம் நாட்டிலுள்ள இலட்சக்கணக்கான பெண்களை ஒரு புதிய கோணத்தில் பார்ப்பதற்கான முயற்சியை நாம் மேற்கொள்வது அவசியமாகும்.

கடந்த காலங்களில், தகைமையும் ஆளுமையும் பெரும்பாலும் பால்நிலைசார் பங்குபாத்திரங்களின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும் ஒரு சமூகமாக நாம் இருந்தோம். எவ்வாறாயினும், வாய்ப்புகள் உருவாகும்போது பெண்ணாக இருப்பது ஒரு தடையாக அமையாத ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு தற்போது நாம் பல சாதகமான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.

போக்குவரத்து மற்றும் நடமாட்டம்(Mobility), சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறை, உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலிகள் போன்ற துறைகளில் இன்று பெண்களின் வளர்ந்து வரும் பங்களிப்பானது, சமூகத்தின் பார்வைகள் பாரம்பரிய எல்லைகளுக்கு அப்பால் விரிவடைந்துள்ளதை எடுத்துக் காட்டுகின்றது.

இருப்பினும், நமது அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் பல பெண்கள்—அவர்கள் தொழில்முயற்சியாளர்களாகவோ, சேவை வழங்குநர்களாகவோ, அரச அல்லது தனியார் துறை உத்தியோகத்தர்களாகவோ அல்லது வெளிநாடுகளில் பணிபுரியும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களாகவோ இருந்தாலும்—அவர்களின் ஒரு நாள் பொழுது பெரும்பாலும் வீட்டிலுள்ள ஊதியமற்ற பராமரிப்புப் பணிகளுடனேயே நிறைவடைகிறது. இந்த உழைப்பு என வரும்போது இது பணப்பெறுமதியினடிப்படையில் (நிதி ரீதியாக) மதிப்பிடப்படுவதோ அல்லது போதியளவு அங்கீகரிக்கப்படுவதோ இல்லை.

எனவே, பெண்களால் மேற்கொள்ளப்படும் இந்தப் பராமரிப்புப் பணிகள் உரிய அங்கீகாரத்தையும் மதிப்பையும் பெறுவதை உறுதி செய்வதும், பெண்கள் வெறும் குடும்பச் சுமைகளைச் சுமப்பவர்களாக மட்டுமன்றி, நாட்டின் பொருளாதாரத்தில் ஒரு முக்கிய பங்காளிகளாக அங்கீகரிக்கப்படுவதும் எமது பொறுப்பாகக் கருதுகிறோம்.

இதன் காரணமாகவே, இவ்வாண்டுக்கான தேசிய தொனிப்பொருள் பின்வருமாறு தெரிவு செய்யப்பட்டுள்ளது:
“பெண்களின் தலைமைத்துவம்: செழிப்பான தேசத்தின் பெருமை.”
பெண்கள் தங்களுக்கு உரிய மரியாதையைப் பெறும் ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதன் மூலம், முடிவெடுக்கும் செயல்முறைகளிலும் அவர்கள் சமமான உரிமைகளைப் பெறுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். அவர்களின் பாதையில் தடையாக இருக்கும் கொள்கை ரீதியான மற்றும் கட்டமைப்பு ரீதியான தடைகளை நீக்கி, பெண்கள் முன்னேறி உலகை வெல்வதற்கான புதிய பாதைகளைத் திறப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

அரசாங்கத்தின் கொள்கை வழிகாட்டியான “செழிப்பான நாடு – அழகான வாழ்க்கை” என்பதில், அபிவிருத்தி என்பது வெறும் பொருளாதார குறிகாட்டிகளை மேம்படுத்துவது மட்டுமல்ல, மாறாக ஒவ்வொரு பிரஜையும் கௌரவமான வாழ்க்கையை அனுபவிப்பதை உறுதி செய்வதாகும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு அரசாங்கம் என்ற ரீதியில், கிராமப்புறம் அல்லது நகர்ப்புறம் என்று பாகுபாடு காட்டாமல், பெருமைமிக்க இலங்கைப் பெண்களை உருவாக்குவதற்கு நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம்.

அன்பு, கருணை மற்றும் பரஸ்பர மரியாதை என்பன உலகளாவிய தேவையாக இருக்கும் இவ்வேளையில், “பெண்களும் மனிதர்களே” என்ற உன்னதப் பார்வையை இலங்கைப் பிரஜைகளாகிய நாம் நமது இதயங்களில் ஏற்றுக்கொண்டு, அந்த நம்பிக்கையைச் செயலாக மாற்றுவோம். 2026 சர்வதேச மகளிர் தினத்தை இந்த உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் ஒரு சந்தர்ப்பமாக மாற்றுவோம்.
பெண்களுக்கு வெற்றி கிடைக்கட்டும்!

சரோஜா சாவித்ரி போல்ராஜ்
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர்
08 மார்ச் 2026

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version