நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்கு நிலக்கரி விநியோகம் தொடர்பாக ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் சிக்கல்களை காரணமாகக் கொண்டு எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் மின்வெட்டு அமுல்படுத்தப்படலாம் எனப் பரவி வரும் தகவல்கள் உண்மையற்றவை என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்காக முன்பதிவு செய்யப்பட்ட 36 நிலக்கரி கப்பல்களில் 22 கப்பல்கள் ஏற்கனவே நாட்டிற்கு வந்து தரையிறக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மீதமுள்ள நிலக்கரி விநியோகமும் எந்தவித தடங்கலுமின்றி வழங்கப்படும் என விநியோகஸ்தர் உறுதி அளித்துள்ளதாகவும், மின் உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் தற்போது வழக்கமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அவசரத் தேவைகள் ஏற்பட்டால் கூடுதல் நிலக்கரி பெற்றுக்கொள்ள தேவையான ஆரம்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், ஏப்ரல் மாத இறுதி வரை மின் உற்பத்தியை தொடரத் தேவையான எரிபொருள் கையிருப்பும் இருப்பதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
எனவே, மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்ற தகவல்களை நம்பி பொதுமக்கள் தவறாக வழிநடத்தப்பட வேண்டாம் என்றும், தவறான மற்றும் திசைதிருப்பும் செய்திகளை பரப்ப வேண்டாம் என்றும் எரிசக்தி அமைச்சு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.