இலங்கையின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் பொருட்டு வெளிநாடுகளின் தலையீடுகளை கோருவது ஆபத்தானது என தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஒரு சிலர் மாத்திரம் எடுக்கும் முடிவுகளை ஒருமித்த தீர்மானங்களாக வெளியிடும் வழக்கத்தை தமிழ் ஊடகங்கள் நிறுத்த வேண்டும் என்றும் அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் அதுகுறித்து அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கையில், ‘இதுபோன்ற முடிவுகளை எடுக்கும் அரசியல் கட்சித் தலைவர்கள், மக்கள் எவ்வளவு சிரமங்களையும் மற்றும் ஆபத்துக்களையும் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை உணரவில்லை என்பதை நினைக்கும் போது, எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது.
இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு வெளிநாடுகளை கோருவது முட்டாள்தனமானது. இத்தகைய நகர்வுகள் பெரும்பான்மை சமூகத்தினரையும் கோபப்படுத்தும். அதுமாத்திரமன்றி, இவ்வாறான நகர்வுகள் இரு நாடுகளுக்கிடையில் நிலவும் நல்லுறவைக் கடுமையாகப் பாதிக்கும்’ என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
