இலங்கையின் பாரம்பரிய ‘தும்பர’ பின்னற்கலைக்கு யுனெஸ்கோ கலாசார மரபுரிமையின் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது.
பிரான்சில் நடைபெற்று வரும் யுனெஸ்கோ கலாசார மரபுரிமை குழுவின் 16ஆவது கூட்டத்திலேயே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
பிரான்ஸுக்கான இலங்கைத் தூதுவர் சிரேஷ்ட பேராசிரியர் ஷனிக்கா ஹிரிம்புரே மற்றும் யுனெஸ்கோவின் இலங்கை கிளையின் செயலாளர் நாயகம் கலாநிதி புஞ்சிநிலமே மீகஸ்வத்த ஆகியோர் தலைமை தாங்கும் இந்த கூட்டத்தை பிரான்சிலுள்ள இலங்கை தூதரகம் ஏற்பாடு செய்துள்ளது.
184 நாடுகளைச் சேர்ந்த தூதுவர்கள் மற்றும் பிரதிநிதிகள் உட்பட சுமார் 800 பேர் காணொளி தொழில்நுட்பத்தினூடாக பங்கேற்ற நிலையில், இதற்கான ஆரம்ப விழா பிரெஞ்ச் தலைநகர் பாரிஸில் உள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் நேற்று முன்தினம் (13/12) நடைபெற்றது.
இதனிடையே, அடுத்த வருடத்தில் வரலாற்று சிறப்புமிக்க கண்டி தலதா பெரஹராவை யுனெஸ்கோ கலாசார பாரம்பரிய தளமாக முன்மொழிவதற்கு புத்தசாசன, சமய அலுவல்கள் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரான்ஸுக்கான இலங்கை தூதுவர் சிரேஷ்ட பேராசிரியர் ஷனிக்கா தெரிவித்துள்ளார்.