பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரினி அமரசூரிய, 6 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்கள் 2027 ஜனவரி மாதத்தில் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இன்று (05.05) பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் அமரசூரிய, சீர்திருத்தங்களுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
6 ஆம் வகுப்புக்கான பாடத்திட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்த அவர், குறைபாடுகள் கண்டறியப்பட்ட முன்னர் அச்சிடப்பட்ட பாடத்திட்டங்களை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழு, ஆய்வை முடித்து, திருத்தங்களைப் பரிந்துரைத்து, கலந்துரையாடல்களை இறுதி செய்துள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
திருத்தப்பட்ட பாடத்திட்டங்கள் இந்த மாதம் அச்சிடுவதற்கு அனுப்பப்படும் என்று பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.
புதிய சீர்திருத்தங்களின் கீழ் ஆசிரியர் பயிற்சி ஜூன் மாதத்தில் ஆரம்பிக்கும் என்றும், அதற்கான நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சீர்திருத்தங்கள் குறித்த ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கான விளக்கங்கள் ஜூலை மாதத்தில் ஆரம்பமாகும் என்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் அமரசூரிய இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.