தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பாளரும், விநியோகஸ்தர்கள் சங்க முன்னாள் தலைவருமான கே.ராஜன் உயிரிழந்த சம்பவம் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அவர் சென்னையில் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
கடந்த சில மாதங்களாக கே.ராஜன் கடுமையான மன உளச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக சம்பாதித்த பணத்தை நண்பர்கள் மற்றும் நெருங்கியவர்களுக்கு கடனாக வழங்கியிருந்தார். ஆனால் அந்த பணத்தை திரும்ப பெற முடியாததால் பொருளாதார சிக்கல்கள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் குடும்பத்தினருடனும் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், குடும்ப பிரச்சினைகளால் அவர் தனியாக ஹோட்டலில் தங்கி வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மனஅழுத்தமே அவரை மிகுந்த பாதிப்புக்குள் கொண்டு சென்றிருக்கலாம் என அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.
1980களில் இருந்து தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் மற்றும் பேச்சாளராக செயல்பட்டு வந்த கே.ராஜன், சினிமா துறையின் பொருளாதார பிரச்சினைகள் குறித்து வெளிப்படையாக பேசி வந்தவர். குறிப்பாக சிறு தயாரிப்பாளர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்தவர் என்றும் திரையுலகினர் நினைவுகூருகின்றனர்.
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனஅழுத்தம் மற்றும் பொருளாதார சிக்கல்களை சரியான நேரத்தில் பகிர்ந்து உதவி பெறுவது மிகவும் முக்கியம் என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.