அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் நோர்வே தூதரக அதிகாரிகளுக்கு இடையில் விசேட சந்திப்பு!

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களுக்கும், இலங்கைக்கான நோர்வே தூதரகப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று (18.05) முற்பகல் கடற்றொழில் அமைச்சில் நடைபெற்றது. அமைச்சரின் அண்மைய நோர்வே விஜயத்தின் தொடர்ச்சியாக, வட மாகாண அபிவிருத்தி, போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாடு, புலம்பெயர் சமூகத்தினூடாக முதலீடுகளை ஈர்த்தல் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான கடற்றொழில் ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவதே இச்சந்திப்பின் முக்கிய நோக்கமாகும்.

இச்சந்திப்பில் நோர்வே தூதரகத்தின் இரண்டாம் செயலாளர் டோர்மோட் நுலண்ட் (Mr. Tormod Nuland) மற்றும் நோர்வேயின் கௌரவத் தூதுவர் மனோ சேகரம் (Mr. Mano Sekaram) ஆகியோர் கலந்துகொண்டனர். இலங்கை அரசு சார்பில் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே. கோலித கமல் ஜினதாச இக்கலந்துரையாடலில் இணைந்திருந்தார்.

வடக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் என்ற ரீதியில் இங்கு உரையாற்றிய இராமலிங்கம் சந்திரசேகர், வட மாகாணத்தின் தற்போதைய சமூக-பொருளாதார சவால்கள் மற்றும் துயரங்கள் குறித்து ஆழமாக சுட்டிக்காட்டினார். “யுத்தம் நிறைவடைந்து 17 ஆண்டுகள் கடந்த போதிலும், வடக்கில் சுமார் 89,000 விதவைத் தாய்மார்களும், பெற்றோரை இழந்த 28,000 அநாதைச் சிறுவர்களும், பிள்ளைகளை இழந்த 8,000 பெற்றோர்களும் பெரும் நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். வன்னிப் பெருநிலப்பரப்பில் 60 சதவீதமான மக்கள் நுண்நிதி மற்றும் கடன்பிரச்சினைகளில் சிக்கியுள்ளதோடு, கடன் சுமை தாங்காது தற்கொலை செய்துகொள்வோரின் வீதமும் அங்கு அதிகரித்துள்ளது” என அவர் கவலையுடன் குறிப்பிட்டார்.

தற்போது வீதிகள், பாலங்கள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை அரசாங்கம் மேம்படுத்தி வந்தாலும், அம்மக்களின் கைகளில் நேரடி வருமானத்தை வழங்கக்கூடிய பாரிய முதலீடுகள் மற்றும் தொழிற்சாலைகளின் அவசியத்தை அமைச்சர் வலியுறுத்தினார். நோர்வேயின் முன்னணி நிறுவனங்கள் இலங்கைக்கு வருகை தந்து, நேரடி முதலீடுகள் (FDI), பொது-தனியார் பங்குடைமை (PPP) அல்லது கூட்டு முயற்சிகள் (Joint Ventures) ஊடாக வடக்கின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முன்வர வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார்.

வரலாற்றில் முதல் முறையாக வடபகுதி மக்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு (NPP) பாரிய ஆணையை வழங்கி, ஆழமான நம்பிக்கை வைத்துள்ளமையை அமைச்சர் சுட்டிக்காட்டினார். “தமிழ் மற்றும் சிங்கள மக்களுக்கிடையிலான இடைவெளி தற்போது குறைவடைந்துள்ளது. இது கடந்த காலத்தில் நீங்கள் பார்த்த பழைய நாடு அல்ல; இதுவொரு புதிய நாடு, புதிய அரசாங்கம். எனவே, நோர்வேயில் வாழும் புலம்பெயர் இலங்கைத் தமிழர்கள் (Diaspora) கடந்த கால கசப்பான நினைவுகளை மறந்து, மீண்டும் தமது தாய்நாட்டிற்கு வந்து முதலீடு செய்யவும், வாழவும் முன்வர வேண்டும். இந்த நேர்மறையான செய்தியை நோர்வே தூதரகம் ஊடாக புலம்பெயர் சமூகத்திற்குத் தெரியப்படுத்த வேண்டும்” என அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

இதற்குப் பதிலளித்த நோர்வே பிரதிநிதிகள், வடக்கின் நிலைமைகளைத் தாம் நன்கு உணர்ந்துள்ளதாகத் தெரிவித்தனர். அத்துடன் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) ஊடாக வடக்கில் முன்னெடுக்கப்படும் கடல் பாசி வளர்ப்பு (Seaweed), திலாப்பியா மீன் வளர்ப்பு (கார்ர்கில் நிறுவனத்துடன் இணைந்து முன்னெடுக்கப்படும் திட்டம்) மற்றும் நோராட் (NORAD) ஊடாக முன்னெடுக்கப்படும் உணவுப் பாதுகாப்புத் திட்டங்கள் குறித்து அவர்கள் சுட்டிக்காட்டினர். அத்துடன், இலங்கை தொடர்பில் புலம்பெயர் சமூகம் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளதாகவும், அமைச்சரின் இந்த நேர்மறையான செய்தியை நிச்சயமாக அவர்களுக்குக் கொண்டு சேர்ப்பதாகவும் தூதரக அதிகாரிகள் உறுதியளித்தனர்.

மேலும், கடற்றொழில் துறையை நவீனமயமாக்குவது குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது. நோர்வேயின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வலை உற்பத்தி நிலையங்களை உலகத் தரத்திற்கு உயர்த்தவும், நாரா (NARA) மற்றும் நோராட் (NORAD) நிறுவனங்களுக்கு இடையிலான ஆராய்ச்சி ஒத்துழைப்புகளைத் தொடரவும் இணக்கம் காணப்பட்டது. அண்மையில் இலங்கையில் கடல் வள ஆய்வுகளை வெற்றிகரமாக மேற்கொண்ட நோர்வேயின் ‘Dr. Fridtjof Nansen’ கப்பலின் பணிகளுக்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய ஒத்துழைப்புக்கும் நோர்வே அதிகாரிகள் விசேட நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version