யாழ்ப்பாண தீவக மீனவர்களுக்கு இந்தியாவின் உதவிக்கரம்

ஊர்காவற்துறை, நயினாதீவு, அனலைதீவு மீனவர்களுக்கு உயர்தர மீன்பிடி வலைகள் வழங்கல்

யாழ்ப்பாண மாவட்டத்தின் கயிற்ஸ், நயினாதீவு மற்றும் அனலைதீவு பகுதிகளைச் சேர்ந்த மீனவர் சமூக உறுப்பினர்களுக்கு இந்திய அரசாங்கத்தின் மனிதாபிமான உதவித் திட்டத்தின் கீழ் உயர்தர மீன்பிடி வலைகள் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த ஜூன் 3 ஆம் திகதி நடைபெற்ற நிகழ்வில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா கலந்துகொண்டு இந்த உதவிகளை வழங்கி வைத்தார்.

நிகழ்வில் உரையாற்றிய அவர், இந்தியா மற்றும் இலங்கை இடையிலான நீண்டகால வரலாற்று, கலாசார மற்றும் மக்கள்-மக்கள் உறவுகளை நினைவுகூர்ந்தார். குறிப்பாக கடலோரப் பகுதிகளில் வாழும் மக்களுக்கிடையிலான நெருக்கமான தொடர்புகளை சுட்டிக்காட்டிய அவர், இந்தியாவின் “அயலவர்களுக்கு” கொள்கையின் கீழ் மக்கள் மையப்படுத்தப்பட்ட அபிவிருத்தி ஒத்துழைப்பை தொடர்ந்தும் முன்னெடுக்க இந்தியா உறுதியாக இருப்பதாக தெரிவித்தார்.

மேலும், மீனவ சமூகத்தின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் சமூகத்திற்கான பங்களிப்புகளை பாராட்டிய அவர், இந்திய அரசாங்கம் வடக்கு மீனவ சமூகங்களின் நலனுக்காக முன்னெடுத்துவரும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களையும் எடுத்துரைத்தார். பருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி, கரைநகர் படகுத்துறை மேம்பாடு, வட மாகாண மீன்வள மேன்மை மையம், மீனவர்களுக்கான பயிற்சித் திட்டங்கள் மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகளுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்குதல் போன்றவை அவற்றில் அடங்குகின்றன.

இந்நிகழ்வில் வழங்கப்பட்ட மீன்பிடி வலைகள் யாழ்ப்பாணம் குருநகர் மீன்பிடி வலைத் தொழிற்சாலையில் இருந்து கொள்வனவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கத்தின் 166 மில்லியன் ரூபாய் நிதியுதவியுடன் 2013 ஆம் ஆண்டு இந்த தொழிற்சாலை மேம்படுத்தப்பட்டதன் மூலம், அதன் வருடாந்திர உற்பத்தித் திறன் 60 மெட்ரிக் தொன்னிலிருந்து 300 மெட்ரிக் தொன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த உதவித் திட்டம் மீனவர்களுக்கு நேரடி நன்மையை வழங்குவதோடு, உள்ளூர் உற்பத்தி மற்றும் பிராந்திய பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிப்பை வழங்கியுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply